Crime, law and justice
வாயில் பீரை ஊற்றி... பள்ளிக் கட்டடத்தில் வைத்து... முதல்வர் தொகுதியில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
மிரண்டுபோன அந்தச் சிறுவன், வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி, தெருவில் இருந்த எங்களிடம் தகவல் தெரிவித்தார். | child abuse case in trichy

போதைப் பயன்பாட்டைக் கண்காணிக்க தனிக்குழுக்கள் அமைக்க வேண்டும். விற்பனை செய்பவர்களை குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்
சிறுமி ஒருவரைக் கடந்த மூன்று மாதங்களாக மது போதையில் நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், திருச்சியை அதிரவைத்திருக்கிறது. முதல்வர் வெற்றிபெற்ற திருச்சி கிழக்குத் தொகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதால், காவல்துறை இதை மூடி மறைக்க முயன்றதாகவும் ‘பகீர்’ புகார் கிளம்பியிருக்கிறது.
திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் வடைக்கடை நடத்திவரும் சித்தி வீட்டில் வசித்துவருகிறார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 15, 16 வயதுடைய நான்கு சிறுவர்கள், சிறுமியை மிரட்டிக் கடந்த மூன்று மாதங்களாகப் பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் நடந்த சம்பவங்களைப் பதைபதைப்புடன் விவரித்தனர்.
“அந்தச் சிறுமிக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான்கு சிறுவர்களும், ‘நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் உன் சித்தியைக் கொன்றுவிடுவோம்’ என மிரட்டி, அவர்களின் ஆசைக்கு இணங்க வைத்திருக் கின்றனர். பள்ளியில் கட்டுமானப் பணி நடைபெறும் கட்டடத்திலும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் ஒரு கட்சிக்குச் சொந்தமான படிப்பகக் கட்டடத்திலும் இரவு நேரங்களில் சிறுமியிடம் அத்துமீறியிருக்கின்றனர்.
அதை வீடியோவாக எடுத்து வைத்து, தொடர்ந்து மிரட்டியுள்ளனர். பின்னர், பீர் அருந்தியபடியும், அதில் ஒருவன் கஞ்சா பயன்படுத்தியபடியும் சிறுமியிடம் அத்துமீறியதுடன், சிறுமிக்கும் வலுக்கட்டாயமாக பீரை வாயில் ஊற்றியிருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இரவு நான்கு சிறுவர்களும், மற்றொரு சிறுவனும் கட்டுமானப் பணி நடைபெறும் கட்டடத்தில் மது அருந்தியிருக்கிறார்கள். அப்போது, அந்த நான்கு சிறுவர்களும் அந்த வழியாகச் சென்ற சிறுமியை, சைகை காட்டி அழைத்துள்ளனர். ஐந்தாவது சிறுவனிடமும், ‘சந்தோஷமாக இருக்கலாம்... வா’ என்று அழைத்துள்ளனர்.
மிரண்டுபோன அந்தச் சிறுவன், வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி, தெருவில் இருந்த எங்களிடம் தகவல் தெரிவித்தார். திகைத்துப்போன நாங்கள் அந்தப் பகுதிக்குச் சென்று, சிறுமியிடம் அத்துமீறிய சிறுவர்களைப் பிடிக்க முயன்றபோது மூன்று பேர் ஓடிவிட்டனர். சிக்கிய ஒரு சிறுவன், கடந்த மூன்று மாதங்களாகச் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதைத் தெரிவித்தான்.
இதையடுத்து சிறுமியின் சித்தி, சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறுவனின் வீட்டுக்குச் சென்று சத்தம் போட்டிருக்கிறார். அப்போது அந்தச் சிறுவனின் தந்தை, ‘இங்கே வந்து என்னடி மிரட்டுற?’ என்றபடி சிறுமியின் சித்தியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். பயந்துபோன அந்தப் பெண் வீதியில் ஓடியபோதும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியிருக்கிறார். இதைப் பார்த்த நாங்கள், சிறுவனின் தந்தையைத் தடுத்து நிறுத்தியதோடு விவகாரத்தை, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றோம்.
மறுநாள் (செப்டம்பர் 4) காலை நான்கு சிறுவர்களையும் அழைத்துச் சென்ற போலீஸார், அன்றிரவே அவர்களை வெளியில் விட்டுவிட்டதாகவும், பின்னர் சிறுமியின் சித்தியிடம் ‘விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். நிவாரணம் வாங்கித்தருகிறோம்’ எனச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது.
இது முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்குத் தொகுதி என்பதால், சட்டமன்றத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாகிவிடக் கூடாது என்று இதை மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள். இதனால் கொந்தளித்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம். அதையடுத்தே செப்டம்பர் 7-ம் தேதி நான்கு சிறுவர்களையும் போலீஸார் கைதுசெய்தனர்” என்று விலாவாரியாகச் சொல்லி முடித்தனர்.
பா.ம.க திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.திலீப் குமார் நம்மிடம், “திருச்சி மாவட்டத்தில் கஞ்சா, மதுப் புழக்கம் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. போதைப் பயன்பாட்டைக் கண்காணிக்க தனிக்குழுக்கள் அமைக்க வேண்டும். விற்பனை செய்பவர்களை குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து திருச்சி மாநகர கமிஷனர் காமினியிடம் கேட்டபோது, “இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவர்களைப் பிடித்து தஞ்சையிலுள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்துவிட்டோம். மற்றபடி, இந்த விஷயத்தில் போலீஸார் உரிய நடவடிக்கையைத்தான் எடுத்திருக்கின்றனர்” என்றார்.
தனது தொகுதியிலேயே நடந்துள்ள இந்தக் கொடூரச் சம்பவம் குறித்தாவது முதல்வர் வாய் திறப்பாரா?
