Lifestyle and human interest
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார் அருகே, தேக்கல்நாய்க்கன்பட்டி காலனி பகுதியில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, கடத்துார் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி தேக்கல் நாயக்கன்பட்டி காலனி யில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பஞ்., நிர்வாகம் சார்பில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த, ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை, 7:00 மணியளவில், தர்மபுரி - பொம்மிடி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கடத்துார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு காலை, 8:30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால், தர்மபுரி - பொம்மிடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.