Politics
``அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்...” கள்ளச்சாராய மரணங்களும், ஆணையத்தின் அறிக்கையும்!

நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்துக்குச் சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தின
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த கோர சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகளைக் கைது செய்வதுடன், அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு வலு சேர்த்திருக்கிறது, கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை.
கொத்துக் கொத்தாக காவு வாங்கிய கள்ளச்சாராயம்!
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள் 67 பேர் துடிதுடித்து உயிரிழந்தார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பலர் கண் பார்வையை நிரந்தரமாக இழந்தார்கள்.
நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்துக்குச் சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தின. அதைச் சமாளிக்க, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50,000 என உடனடி நிவாரணத் தொகையை அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.
அத்துடன், ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அதையடுத்து அந்த ஆணையம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் விசாரணை செய்தது. இதற்கிடையில், மாநில சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவால் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி சட்டப்பேரவையில் தன்னுடைய இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது கோகுல்தாஸ் ஆணையம்.
``காவல்துறையும், கலால்துறையும் பொறுப்பேற்க வேண்டும்!”
அந்த அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்களுக்குக் காவல்துறை, கலால்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமும், மெத்தனப் போக்கும் காரணமாக இருந்திருக்கிறது. கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அதிகமாக நடைபெறுவது தெரிந்தும், அதைத் தடுப்பதற்கான முயற்சி களை அவர்கள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்களுமே இந்தப் பேரழிவிற்குப் பொறுப்பானவர்கள்.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அபாயகரமான மெத்தனால் வேதிப்பொருள் கடத்தி வரப்பட்டதை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது உடனே விசாரணை நடத்த வேண்டும். வரும் காலங்களில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரி களைக் கொண்ட சார்பற்ற மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுவை அமைத்து, தவறு செய்யும் அதிகாரிகளை மாதந்தோறும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் மற்றும் வசூலிக்கப்படும் அபராத தொகையைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு நிதியை உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் தலா ஐந்து படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வுப் பிரிவுகளை அமைத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் வாரம்தோறும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். மது விற்பனையை படிப்படியாக குறைத்து, முழுமையான மதுவிலக்கை செயல்படுத்தலாம். அதேபோல, இயற்கை மதுபானங்களான கள் இறக்குவது, மற்றும் விற்பனை செய்வது குறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
``மக்களின் வரிப்பணத்தை ஏன் கொடுக்க வேண்டும்?”
இதுகுறித்து நம்மிடம் பேசிய சூழலியலாளரும், செயற்பாட்டாளருமான பியூஷ் மனுஷ், “இந்தச் சம்பவத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஓர் அரசு ஊழியர் தெரிந்தே செய்யும் தவறுகளால் மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு தண்டனை வழங்குவதற்கு சட்டப்பிரிவுகள் இருக்கின்றன. அந்த வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் நிறுத்திவிடாமல் வழக்கை விரைந்து நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டியது, அரசின் கடமை.
அதேபோல, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு கோடிக்கணக்கில் நிவாரணத் தொகையைக் கொடுத்திருக்கிறது. அந்தப் பணம் மக்களின் வரிப்பணம். அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு மக்களை ஏன் வஞ்சிக்க வேண்டும்? அதனால், அந்த மொத்த பணத்தையும் தவறிழைத்த அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும், அவர்களின் சொத்துகளை கையகப்படுத்தியும் மீட்க வேண்டும். அவர்கள் எந்தத் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களிடமிருந்துதான் இழப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும்.
அதேபோல இந்த விவகாரத்தை உள்ளூர் காவல் நிலையத்துடன் முடித்துவிடாமல், அவர்களை முறையாக வழிநடத்தாமல் விட்ட உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சம் என்ற நாள்பட்ட நோயைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார் கண்டனங்களுடன்.
சம்பளம் வாங்கும் அதிகாரிகள், வேலைபார்ப்பார்களா?
ஓர் அரசாங்கம், நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மாநில முன்னேற்றம் எனச் செயல்படுவதைவிட மிக அடிப்படையானது, முக்கியமானது, முதன்மையானது... மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், கள்ளச்சாராய மரணங்கள் மாநில நிர்வாகத்துக்கே தலைகுனிவு.
ஏழை மக்களே கள்ளச்சாராயத்துக்கு பலி ஆகிறார்கள். அதை ஒழிக்க, அரசு விற்பனை செய்யும் மதுவின் விலை குறைக்கப்பட வேண்டும், அதற்கு அதன் மீதான வரி குறைக்கப்பட வேண்டும் என்கிறார்கள் சில நிபுணர்கள்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்கச் செயல்பட வேண்டிய துறைகளும் அதிகாரிகளும், வாங்கும் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலே நிலைமை கட்டுக்குள் வரும்.
ஆனால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ‘பெறுவதை பெற்றுக்கொண்டு’ தங்கள் பணியை செய்யாமல்விட்டு, எளிய மக்களின் உயிர்கள் பறிபோகக் காரணமாகிறார்கள். எந்த ஆட்சியிலும் இது தான் நிலை என்பது, த.வெ.க ஆட்சியிலாவது மாறுமா அல்லது தொடருமா?
