Politics
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 12 துறை அதிகாரிகளே பொறுப்பு.. விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு 12 துறை அதிகாரிகள் பொறுப்பு என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 12 துறை அதிகாரிகளே பொறுப்பு எனக் கூறியுள்ள விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்குமே கள்ளச்சாராய மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குறித்து தொடக்கத்திலேயே தெரிந்தும் காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பளிச் பதில்!
அதேபோல், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராபாளையம் காவல் நிலையங்களில் பணிபுரிந்த காவல் துறையினர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோரே இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 2023 மே முதல் 2024 ஜூன் வரை பணியாற்றிய அரசு அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
