Politics
கூட்டணி அமைச்சரவையில் மாற்றம்: விஜய் முடிவால் மந்திரிகள் திக்... திக்...
சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் செப்.9 உடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க., தனிப்பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், இ.கம்யூனிஸ்ட், மா. கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது.
அமைச்சரவையில், முதல்வர் விஜயுடன் சேர்த்து 35 பேர் உள்ளனர். காங்., சார்பில் இருவர், வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் சார்பில் தலா ஒருவர் அமைச்சர்களாக உள்ளனர்.
த.வெ.க., ஆட்சியமைத்து, 100 நாட்களை கடந்த நிலையில், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் மேற்கொண்ட பணிகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்கள், தொகுதி பணிகள், கட்சியினரிடம் நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவை தொடர்பாக, விஜய்க்கு, அவரின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்னு ரெட்டி அறிக்கை அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக அமைச்சரவையில் எப்போதும் இல்லாத வகையில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பை முதல்வர் விஜய் வழங்கினார். ஆனால், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதை, துறை செயலர்கள் வாயிலாக முதல்வர் விஜய் தெரிந்து கொண்டார்.
அவர்கள், தங்களின் வெற்றிக்காக உழைத்த சொந்த கட்சி நிர்வாகிகளை கூட மதிக்கவில்லை என்றும் விஜய்க்கு தகவல்கள் சென்றுள்ளன.
எனவே, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளார். கூட்டணி கட்சிகளில், ஒரு அமைச்சரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது.
த.வெ.க., அமைச்சர்களில், ஒரு பெண் அமைச்சர் உட்பட மூன்று பேர் நீக்கப்பட உள்ளனர்.
தனக்கு பெரிய இலாகா வேண்டாம் என, ஒரு அமைச்சர் கேட்டதால், அவரது இலாகா மாற்றப்பட உள்ளது. அமைச்சரவை மாற்றம் தகவல் வெளியானதால், அமைச்சர்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

