Politics
3 அமைச்சர்களுக்கு கல்தா... கலைத்து ஆடும் முதல்வர்!

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த பட்டியலை எடுத்திருப்பதுதான் தலைமைச் செயலகத்தில் ‘ஹாட் டாபிக்’.
சில வாரங்களாக ஆறிப்போயிருந்த ‘அமைச்சரவை மாற்றம்’ பரபரப்பு, மீண்டும் கோட்டையில் பற்றிக்கொண்டுவிட்டது. அமைச்சரவையைக் கலைத்து ஆடத் தயாராகும் முதல்வர் விஜய், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த பட்டியலை எடுத்திருப்பதுதான் தலைமைச் செயலகத்தில் ‘ஹாட் டாபிக்’.
அதில், மூன்று பேரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க ஆலோசித்திருப்பதுடன், தான் உட்பட ஐந்து பேருடைய துறைகளை மாற்றிக்கொடுக்கத் தயாராகிறார் முதல்வர் விஜய். மூன்று அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்பாக மேலும் சில துறைகள் ஒதுக்கப்படவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
“பர்ஃபார்மன்ஸ் சரியில்லை...” - மூவருக்கு கல்தா!
த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்கள் கடந்துவிட்டன. முதல்வர் உட்பட 35 அமைச்சர்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல்., வி.சி.க அமைச்சர்களைத் தவிர்த்து, 31 பேர் த.வெ.க-வைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய துறைரீதியிலான செயல்பாடுகளைக் கண்காணிக்கச் சொல்லி, உளவுத்துறைக்கும் தன்னுடைய ஆலோசகர்களுக்கும் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார் முதல்வர் விஜய். 50 நாள்களுக்கு முன்னதாக ஒரு ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இரண்டாவது ரிப்போர்ட் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டிலும் செயல்பாடுகளில் கோட்டைவிட்டதாக இடம்பெற்றவர் களைத்தான் அமைச்சரவையிலிருந்து கழற்றிவிடுவதற்குத் தயாராகிறாராம் முதல்வர்.
அது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர்கள் சிலர், “பர்ஃபார்மன்ஸ் சரியில்லாத காரணத்தால், அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார் மூவரையும் அமைச்சரவையிலிருந்து கழற்றிவிட ஆலோசித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதற்குக் காரணங்களும் இருக்கின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குகிறார் சமூக நலத்துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி. அவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவுக்கும் இடையேயான உட்கட்சிப் பஞ்சாயத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரை மேடையில்வைத்தே உருட்டிக் கலக்கியதெல்லாம் சர்ச்சையானது.
அடுத்ததாக, ‘ஜட்டியோடு உட்காரவைத்து அடிப்பேன்’ என்று ஜெகதீஸ்வரி குரலில் ஒரு ஆடியோ லீக்காக, விருதுநகரே அரண்டுபோனது. ஜெகதீஸ்வரியை அமைச்சர் பொறுப்புக்கு சிபாரிசு செய்தது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தான் என்பதால், அவரிடம் ஜெகதீஸ்வரியைக் கண்டிக்கச் சொன்னார் முதல்வர் விஜய். அதன் பின்னர் வார்த்தைகளை அடக்கி வாசித்த ஜெகதீஸ்வரி, தன்னுடைய துறையில் பெரிய கவனம் செலுத்தவில்லை. சமூக நலத்துறை தொடர்பான விவாதம் சட்டமன்றத்தில் நடந்தபோது, பதிலுரை வழங்க ரொம்பவும் திக்கித் திணறிவிட்டார்.
`இல்லங்கள்’ என்பதற்கு `இலக்கங்கள்’ என்றும், `பேரவைத் தலைவ’ருக்கு `பேலவைத் தலைவர்’ என்றும், அவர் உளறிக் கொட்டியதெல்லாம் சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ ஆகின. வாடகைக் கட்டடங்களில் அங்கன்வாடி மையங்கள் இயங்குவது குறித்து குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து கேள்வி எழுப்பவும், பதிலையே மாற்றிப் படித்தார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. இவை அனைத்தும் தன் பார்வைக்கு வரவும் டென்ஷனாகிவிட்டார் முதல்வர். இதையடுத்தே, நீக்கப்படும் பட்டியலில் ஜெகதீஸ்வரியின் பெயரைச் சேர்க்கச் சொல்லிவிட்டார்.
டெல்லி சந்திப்பு... காட்டுப்பன்றி விவகாரம்... டென்ஷனில் முதல்வர்!
கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மீதும் சர்ச்சைகள் குவிகின்றன. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 29-ம் தேதி, நலத்திட்ட விழா ஈரோட்டில் நடந்தது. அதில் பேசிய விஜய் பாலாஜி, ‘மக்கள் நீங்க பண்ணுனீங்க பாரு ஒரு பெரிய ஊழல்... வாங்க வேண்டிய இடத்துல வாங்கிட்டு, குத்தவேண்டிய இடத்துல குத்திட்டீங்க...’ என்று த.வெ.க-வுக்கு வாக்களித்தவர்களைச் சிறுமைப்படுத்தும்விதமாகப் பேசினார். அதைக் கண்டித்த சீனியர்கள், முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். அப்போதே முதல்வரின் `குட்புக்’கிலிருந்து விஜய் பாலாஜி சறுக்கிவிட்டார்.
அமைச்சரின் ரத்த உறவான ‘இதயம்’ நடிகர் பெயர் கொண்டவர், அமைச்சர் ஆசியோடு துறைக்குள் அடிக்கும் கொட்டமெல்லாம் முதல்வரின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. ஈரோட்டிலுள்ள சாயப்பட்டறை ஆலை அதிபர்களும் முதல்வர் அலுவலகத்துக்கு பெட்டிஷனுக்கு மேல் பெட்டிஷன் அனுப்புகிறார்கள். கடந்த மாதம், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்திக்கப்போவதாகச் சொல்லிவிட்டு, அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து தொழிலதிபர்களை டெல்லியில் சந்தித்திருக்கிறார் விஜய் பாலாஜி. அப்படியொரு சந்திப்பு நடப்பதாக முதல்வர் அலுவலகத்துக்கு இருவருமே தெரியப்படுத்தவில்லை. அதிலிருந்து, தமிழ்நாட்டைவிட்டு எந்த அமைச்சர் சென்றாலும், அவர்களுடைய சந்திப்பு விவரங்களையும் அப்டேட் செய்ய உத்தரவிட்டிருக்கிறது முதல்வர் அலுவலகம்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வில், பொதுச்செயலாளராக இருந்தவர்தான் காஞ்சிபுரம் ரஞ்சித்குமார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் சிபாரிசில் த.வெ.க-வில் இணைந்து வெற்றிபெற்றவருக்கு, வனத்துறை அமைச்சர் பொறுப்பும் அளிக்கப்பட்டது. ஆனால், துறையில் போதிய கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகிறார் ரஞ்சித்குமார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரைச் சொல்லி ரஞ்சித்குமார் சட்டமன்றத்தில் விமர்சிக்கவும், முதல்வரே அதற்கு நேரில் மன்னிப்புக் கோரினார். காட்டுப்பன்றிகள் தொடர்பாக ஒரு விவகாரத்தை, தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் எழுப்பவும், சர்ச்சைக்குரிய விதத்தில் ரஞ்சித்குமார் பதிலளித்தார். அதை டென்ஷனோடு பார்த்துக் கொண்டிருந்த முதல்வர், நீக்கப்படுபவர்களின் பட்டியலில் ரஞ்சித்குமாரின் பெயரையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்.
தடுமாறும் மரிய விலசன்... ஜஸ்ட் மிஸ்!
இந்த மாற்றங்களைத் தவிர சிலருக்கு இலாகாக்கள் மாற்றமும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நிதித்துறையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார் அமைச்சர் மரிய வில்சன். அவருக்குத் தொழில்துறையை அளித்துவிட்டு, கீர்த்தனாவுக்கு சமூக நலத்துறையை அளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றச் செயல்பாடுகளில் போதுமான அளவுக்குப் பயிற்சி இல்லை என்றாலும் சமாளிப்பதோடு, சிலரின் வலுவான சப்போர்ட் இருப்பதால், கீர்த்தனாவுக்கு இலாகா மாற்றம் உறுதி என்கின்றனர்.
அமைச்சர் ராஜ்மோகன் வசமிருக்கும் பள்ளிக்கல்வித்துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறை அமைச்சர் வேளச்சேரி குமாருக்கு அளித்துவிட்டு, ராஜ்மோகனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையை வழங்க ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, முதல்வர் வசமிருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையும் கூடுதலாக ராஜ்மோகனுக்கு வழங்கப்படலாம்.
இந்த மாற்றத்தில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகம்மது பர்வேஸுக்குக் கைத்தறி மற்றும் நெசவுத்துறை, கனிம வளத்துறை அமைச்சர் பிரபுவுக்கு வனத்துறை இலாகாக்கள் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்படலாம். இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்துவரும் முதல்வர், விரைவிலேயே கலைத்து ஆடத் தயாராகிறார்” என்றனர் விரிவாகவே.
மாற்றங்கள் எப்போது?
முதல்வரின் கலைத்தாடும் ஆட்டத்தில், புதிதாக யாரையும் அமைச்சரவையில் சேர்க்கும் ஆலோசனை இல்லை. ஆர்.எஸ்.முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன், வி.எஸ்.பாபு, பாலமுருகன், கனிமொழி, கார்த்திகேயன் என்று கட்சியிலுள்ள பலருமே அமைச்சர் பதவிக்கான எதிர்பார்ப்புகளோடு வலம் வருவதால், தேன்கூட்டில் கல்லெறிய ஆட்சி மேலிடம் தயாராக இல்லை. இந்த மாதத்தின் மத்தியில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கிளம்பவிருக்கிறார் முதல்வர் விஜய். ‘அவர் ஊர் திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்’ என்கின்றன த.வெ.க சீனியர் வட்டாரங்கள்.
நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “ஜெகதீஸ்வரி, விஜய் பாலாஜி இருவருமே தன்னுடைய ஆதரவாளர்கள் என்பதால், அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட மெனக்கெடுகிறார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ரூட்டில், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ரஞ்சித்குமார் தவியாய் தவிக்கிறார். இப்போதைக்கு அமைச்சரவை மாற்றத்துக்கான பட்டியல்தான் ரெடியாகியிருக்கிறதே தவிர, இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. லண்டனிலிருந்து முதல்வர் திரும்பியதும், இந்த மாற்றங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை பரிசீலித்துவிட்டு ஆக்ஷனில் இறங்குவார்” என்றார்.
அமைச்சரவையைக் கலைத்து ஆடி, ஆட்சிக்குள் ஒரு ‘ஷாக்’கை உருவாக்கத் திட்டமிடுகிறார் முதல்வர் விஜய். அதன் மூலமாக, ஜெயலலிதா பாணி அரசியலைக் கையிலெடுத்து, சரியாகச் செயல்படாதவர்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கவும் தயாராகிறார். அதேசமயம், முதல்வரின் மனம் இலகுவானது என்பதால், லண்டனிலிருந்து அவர் திரும்புவதற்குள், அவர் திட்டமிட்டிருக்கும் மாற்றங்களுக்கேகூட மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்!
