Arts, culture, entertainment and media
‘கிடா வெட்டி விருந்து வைத்தாலும் பத்தாது’ - ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி தள்ளிய பிரபல இயக்குநர்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் காமெடி கலாட்டாவுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே படத்தின் தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் பட வெளியீட்டுக்கு முன்பு நடந்த டிரெய்லர் வெளியீட்டில் கார்த்திக் சுப்புராஜ், அயலான் ரவிகுமார், டியூட் கீர்த்தீஸ்வரன், பாரி இளவழகன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து சூரி, கார்த்திக் சுப்புராஜ், சிம்பு தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக படத்தை பாராட்டியிருந்தனர். தொடர்ந்து பலரது பாராட்டை பெற்று வரும் இப்படத்தை தற்போது ‘நந்தன்’ இயக்குநர் இரா.சரவணன் பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இயக்குநர் சற்குணம் சாரின் ‘களவாணி’ படம் பார்த்த நாளில்தான் இப்படி வியந்து போனேன். கதை, களம், கதாபாத்திர வார்ப்பு என அத்தனையிலும் முத்தாய்ப்பு பண்ணுகிற படமாக என்னை கொண்டாட வைத்துவிட்டது ‘மொத ராத்திரி’ படம். இவர்கள் யாருமே நடிகர்கள் அல்ல… அப்படியே அந்தக் கிராமத்து மக்கள்…” எனச் சொல்கிற அளவுக்கு கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த விதம் மகத்தானது. அழகும் சிவப்பும் நாயக பிம்பமும் கொண்ட நட்சத்திரங்களின் பின்னால் அலையாமல், அவர்களின் தேதிக்காகக் காத்திருக்காமல் இயல்பு மாறாத மனிதர்களை அப்படியே திரையில் உலவ விட்டிருக்கிறார்கள். கதாநாயகன் ரிஷிகாந்த் சாதாரண ஒரு பையனாக நமக்கு அறிமுகமாகி, படிப்படியாக நம் மனதில் நின்று நெருக்கமாகி கலங்கடிக்கிறார். ‘சிறை’ படத்திலேயே நெஞ்சம் ஈர்த்த அனீஷ்மாவுக்கு இந்தப் படம் இன்னுமொரு மைல்கல். தத்தளிக்க வைக்கிற நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.
சேத்தன் சார் தொடங்கி இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் வரை எல்லா கதாபாத்திரங்களும் அந்தக் கிராமத்தின் இன்னோர் ஆல மரங்கள். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என இரு தரப்பிலும் நடக்கும் களேபரங்கள் அனைத்துமே நம் எல்லோர் வாழ்விலும் வந்து போனவைதான். அதனைக் கலகலப்பும் கொண்டாட்டமுமாய் இயக்கி இருக்கிறார் தம்பி ராஜா கருப்பசாமி. அவர் இதில் முன்வைத்திருக்கும் அரசியலும் சாதாரணமானது அல்ல. பெண் கல்வி தொடங்கி சாதிச் சங்கடம் வரை எண்ணற்ற விஷயங்களைச் சமூகப் பொறுப்போடு பேசி இருக்கிறார். பரப்புரையாக இல்லாமல் நியாயத் தராசை நம் நெஞ்சுக்குள் தானாக நிறுத்திப் பார்க்கிற காட்சிகள் அவை. இப்போகூட பைக்ல தள்ளிதானே சார் உட்கார்ந்து இருக்கீங்க? என ஏ.வெங்கடேஷிடம் ஓர் இளைஞன் கேட்கிற கேள்வி, எப்பேர்ப்பட்ட சாதி வெறியர்களையும் கலங்கடிக்கும்.
இயக்குநருக்கு நிகராய் இந்தப் படத்தில் கோலோச்சி இருக்கும் இன்னொரு தூண் இசையமைப்பாளர் பரத் சங்கர். யார்க்கர் பந்தில் சிக்ஸர் அடிக்கும் சாமர்த்தியத்துடன் மிக சிக்கலான கதையில் பேயாட்டம் ஆடி இருக்கிறார். ஹீரோயின் பாத்ரூமிலிருந்து தப்பிக்க முயல்கிற காட்சி ஒரு சோறு உதாரணம். தம்பி பரத் சங்கர் வாழ்வில் மிக முக்கிய படமாக ‘மொத ராத்திரி’ நிச்சயம் நிலைத்திருக்கும். இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்ளிட்ட மொத்த படக்குழுவினரையும் அழைத்து வந்து கிடா வெட்டி விருந்து வைத்தாலும், இந்தப் பரவச மனநிலை ஆசுவாசம் அடையுமா எனத் தெரியவில்லை. இப்பேர்ப்பட்ட படத்தை மக்கள் மத்தியில் ஊடகங்கள் இன்னும் பெரிதாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்க வேண்டும். இப்போதும் தாமதமில்லை… எப்படியாவது ‘மொத ராத்திரி’ படத்தைத் திரையில் பார்த்துக் கொண்டாடி விடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)