Politics
நெல்லை மேயர் மீதான புகாரில் முன்னாள் மனைவி திடீர் பல்டி

திருநெல்வேலி: திருநெல்வேலி தி.மு.க., மேயர் ராமகிருஷ்ணன், 58, என்பவரின் முன்னாள் மனைவி சாந்தி, 50, தன் மாஜி கணவர் மீது புகார் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரே அதை மறுத்து புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., மேயர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி. தம்பதிக்கு, மனநலம் பாதித்த, 26 வயது மகன் உள்ளார். சாந்தி, தன் பெற்றோருடன் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வசிக்கிறார்.
ராமகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த செவிலியர் ஒருவரை, சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். செவிலியரின் மகளுக்கு சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
இதுகுறித்து, முதல் மனைவி சாந்தி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1998ல் எங்கள் திருமணம் நடந்தது. 2000ல் பிறந்த என் மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், எங்களை வீட்டில் இருந்து விரட்டினர். நான் தற் போது மகனுடன், பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன்.
மகனின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுகிறேன். கணவர் எந்த உதவியும் செய்யவில்லை.
ஆனால், யாரோ ஒருவரது மகளுக்கு, 40 லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் நடத்துகிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு, பேசியிருந்தார்.
இந்நிலையில், சாந்தி நேற்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'கடந்த, 2008ல் நான் விவாகரத்து பெற்று விட்டேன். முன்னாள் கணவர் மாதந்தோறும் எனக்கு உதவுகிறார்.
'இரு பெண்கள் வந்து, என்னிடம், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வீடியோ வெளியிடுமாறு கூறினர். அந்த வீடியோ எனக்கும், முன்னாள் கணவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது' என, தெரிவித்துள்ளார்.