Lifestyle and human interest
பாரம்பர்ய அரிசி ரகங்கள், சிறுதானியங்களில் செட்டிநாட்டுப் பலகாரங்கள்...
ஆரம்பத்தில் நண்பர்கள் சொன்னாங்கனு பலகாரங்கள் தயாரிக்க நவீன மிஷின்களை லட்சக்கணக்கில் செலவு பண்ணி வாங்கிட் டோம்.

அசத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!
செட்டிநாட்டுப் பலகாரங்கள், பல தலைமுறைகள் கடந்த பாரம்பர்ய பெருமைகொண்டவை. சமீபகாலமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் செட்டிநாட்டுப் பலகாரங்களில் பாரம்பர்ய சுவை அரிதாகிவிட்டது. காரணம், நவீனரக அரிசியின் பயன்பாடுதான். இந்த நிலையில், நாட்டு அரிசி ரகங்கள் மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி... பாரம்பர்ய சுவை மாறாமல் செட்டிநாட்டுப் பலகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது, ‘கிரானிஸ் செட்டி நாட்டுப் பலகாரக் கடை'. இந்தக் கடை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகிலுள்ள மேலைச் சிவபுரியில் இருக்கிறது. ஒரு பகல் பொழுதில் இந்தக் கடைக்கு ஒரு விசிட் அடித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மண்பானைத் தண்ணீர் கொடுத்து, புன்னகை யுடன் வரவேற்றார், உரிமையாளர் கணேஷ் சோலை.
மனைவியின் யோசனை!
``எனக்குச் சொந்த ஊர், பக்கத்தில் இருக்கிற வேந்தன்பட்டி கிராமம். நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன். அப்பா, பெங்களூருவில் பேக்கரி ஐட்டங்களை மொத்தமா வாங்கி விற்பனை செய்யும் தொழில் செஞ்சுட்டிருந்தார். அங்கே நான் ஐந்து வருஷம் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்வா வேலை பார்த்தேன். சொந்தமா தொழில் தொடங்கணும்ங்கிற ஆசையில் இருந்தப்போ, என் மனைவிதான் `செட்டிநாட்டுப் பலகாரங்களைப் பாரம்பர்ய சுவையில் தரமா தயார் செஞ்சு விற்பனை செய்யலாம்'னு சொன்னாங்க. எனக்கும் அது பிடிச்சதால இந்தக் கடையை ஆரம்பிச்சோம். இளம் தலைமுறையினரை ஈர்க்கக்கூடிய வகையில் இருக்கணும்னு `கிரானிஸ் செட்டிநாட்டுப் பலகாரக்கடை'னு பெயர் வெச்சோம். `கிரானிஸ்'னா, தமிழில் பாட்டிகள்னு அர்த்தம். பாரம்பர்யம் சார்ந்த பொருள்களை குறிக்குறதுக்குப் பல நாடுகளில் கிரானிஸ்ங்கற பேர் பயன்படுத்தப்படுது.
கைப்பக்குவம் நிறைந்த ஊழியர்கள்!
செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்யுறதில கைதேர்ந்த சிலரை வேலைக்குச் சேர்த்துக் கிட்டோம். அவங்கதான் எங்களுக்கும் இந்தப் பலகாரங்களை எப்படிச் செய்யுறதுனு சொல்லிக் கொடுத்தாங்க. நான் நல்லா கத்துக் கிட்டதால, பெரிய ஆர்டர்கள் வந்தாலும் என்னால் சமாளிக்க முடியிது. இங்க வேலை பார்க்கிற 20 பேரில் 15 பேர் பெண்கள். எல்லாருமே பொன்னமராவதியைச் சுற்றி யிருக்கிற ஊர்களைச் சேர்ந்தவங்க. அதனால எல்லாருக்கும் கைப்பக்குவம் இருக்கு. அவங்களின் முழுமையான ஒத்துழைப்பாலும், வாடிக்கையாளர்களின் வரவேற்பினாலும் கடை வெற்றிகரமா செயல்படுது’’ என்ற கணேஷ் சோலை, தயார் செய்யும் பலகாரங்கள் குறித்துச் சொன்னார்.
சுவையூட்டி, நிறமூட்டி கிடையாது!
``பாரம்பர்ய அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்கள் பயன்படுத்தினால்தான் பாரம்பர்யச் சுவையைக் கொண்டுவர முடியும்னு முடிவெடுத்து... மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக்கவுனி, பூங்கார் உள்ளிட்ட அரிசி வகைகள், குதிரைவாலி, காடைக் கண்ணி, தினை, சாமை, கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சிவப்புச் சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகளைத்தான் பயன் படுத்துறோம். ரசாயன நிறமூட்டி, சுவையூட்டி, பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் எதையும் பயன்படுத்துறதில்லை. மரச்செக்கில் ஆட்டின கடலை எண்ணெயில்தான் பலகாரங்கள் தயார் செய்றோம். அதேபோல பார்சல் அனுப்ப, தகர டின், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துறதில்ல. மூங்கில் கூடைகளைத்தான் பயன்படுத்துறோம். அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கு.
கையால் செய்தால்தான் சுவை!
ஆரம்பத்தில் நண்பர்கள் சொன்னாங்கனு பலகாரங்கள் தயாரிக்க நவீன மிஷின்களை லட்சக்கணக்கில் செலவு பண்ணி வாங்கிட் டோம். அந்த மிஷின்களில் குறைந்த நேரத்தில் அதிக பலகாரங்கள் தயாரிக்கலாம். மாவை மட்டும் போட்டால் பலகாரம் தயாரிச்சு பாக்கெட் போட்டு வந்துடும். ஆனால், அதில் தயார் செஞ்ச பலகாரங்கள் எங்களுக்குத் திருப்தியா இல்லை. அதனால், முழுக்க கைப்பக்குவத்தில் செய்ய ஆரம்பிச் சுட்டோம்.
தேன்குழல், மணக்கோலம், மகிழம்பூ முறுக்கு, கை முறுக்கு, சீப்பு சீடை, அதிரசம், மணப்பாறை முறுக்கு, சீடை, மாவு உருண்டை, ரோட்டு பக்கோடா, இனிப்பு சீடை, கம்பு உருண்டை உள்ளிட்ட 12 வகையான செட்டி நாட்டுப் பலகாரங்களை தயாரிச்சு விற்பனை செய்றோம். கல்யாணம் மற்றும் தீபாவளி சீர் வரிசைக்கு அதிகமா ஆர்டர்கள் வருது. வெளிநாடுகளுக்கும் பலகாரங்களை அனுப் பிட்டிருக்கோம்’’ என்ற கணேஷ் சோலை நிறைவாக,
சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை!
பொன்னமராவதி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருக்கிற சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் எங்க பலகாரங்களை அனுப்புறோம். ஒரு மாசத்துக்கு 7 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரைக்கும் வியாபாரம் நடக்குது. தீபாவளி நெருங்கும் போது வியாபாரம் கூடுதலா இருக்கும். சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, மும்பை மாதிரியான பெரு நகரங்களில் கிளைகளைத் தொடங்கணுங்கிறது எங்களின் எதிர்காலக் கனவு. கூடிய சீக்கிரத்தில் கை கூடும்னு நம்புறேன்’’ என்று சொல்லி விடை கொடுத்தார்.
வாசிப்பை நேசிக்கப் புத்தகங்கள்!
“இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைஞ்சுப்போச்சு. வாசிக்கிறதுக்கு அவங்களுக்கு நேரமும் இல்லை. எங்க கடைக்குப் பலகாரம் வாங்க வரக்கூடிய வாடிக்கையாளர்கள் பத்து, பதினைஞ்சு நிமிஷம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால், பயனுள்ள வகையில் புத்தகங் களைப் படிக்கணும்னுங்கறதுக்காக இங்கே நிறைய புத்தகங்களை வெச்சிருக்கேன். செட்டிநாட்டுப் பாரம்பர்ய உணவு வகைகளின் பெருமைகளை உலகம் முழுக்க இருக்கிற மக்களிடம் கொண்டு சேர்க்கணும்னு... கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் பண்ணிட்டுருக்கேன். இளம் தலைமுறையினர் மனசில் பதிய வெச்சா தான் எதிர்காலச் சந்ததிக்குப் போய்ச் சேரும்” என்கிறார், கணேஷ் சோலை.
