எண்ணெய் ஆலைகளை தாக்க மாட்டோம்: உக்ரைன் - ரஷ்யா பரஸ்பரம் அறிவிப்பு

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே நான்காண்டுகளைக் கடந்து போர் நடந்து வருகிறது. போரை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யா தன் எரிபொருள் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து போரை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சர்வதேச நாடுகளிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அதேபோல் உக்ரைனுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள், அந்த நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ஒருபுறம், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் எரிபொருள் இலக்குகள் மீதான தாக்குதலால் உலகளவில் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்தது. இதற்கு அமெரிக்காவும் தப்பவில்லை.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவின் எரிபொருள் இலக்குகள் மீதான தாக்குதலை உக்ரைன் கைவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து பதிலளித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சர்வதேச நாடுகள் எங்களுடைய பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் அளித்தால் இத்தாக்குதலை இடைநிறுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவும், உக்ரைனும் எரிசக்தி இலக்குகள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்த உறுதியான அறிவிப்புகள் எதையும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இதுவரை வெளியிடவில்லை.