Health
மதுரை அரசு மருத்துவமனை, மாநகராட்சி இடையே பனிப்போர்: குப்பை அள்ளாமல் கேள்விக்குறியாகும் சுகாதாரம்

மதுரை; மாநகராட்சி ஒத்துழைப்பின்மையால் மதுரை அரசு மருத்துவமனையில் ஆக. 12 முதல் குப்பை அள்ளப்படாமல் தேங்கி டாக்டர்கள் பணியாளர்கள், நோயாளிகள் அவர்களது உறவினர்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை பழைய வளாகம், தீவிர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (டி.சி.சி.,), பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகங்களில் (எஸ்.எஸ்.பி.,) மருத்துவக் கழிவுகள் அல்லாமல் வார்டு உட்பட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் 7 டன் அளவு குப்பை சேர்கிறது. 6 மாதங்களுக்கு முன் காலை, மதியம் மாநகராட்சி பணியாளர்கள் குப்பையை அகற்றிய நிலையில் ஒருமுறையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை, தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்ற பெரிய நிறுவனங்களில் சேரும் குப்பையை அந்தந்த நிறுவனங்களே எடுத்துச் சென்று வெள்ளக்கல் குப்பைக்கிடங்கில் கொட்ட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனால் டி.சி.சி., எஸ்.எ ஸ்.பி., வளாகங்களில் ஆக. 12 க்கு பிறகு நேற்று (செப். 7) வரை தொடர்ந்து 26 நாட்களாக குப்பை அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் இரண்டு முறை கனமழை பெய்ததால் மழைநீருடன் குப்பை கலந்து டி.சி.சி., எஸ்.எஸ்.பி., வளாகங்களின் பின்பகுதி முழுவதும் பரவி மருத்துவமனைக்குள் துர்நாற்றம் வீசியது. டி.சி.சி., வளாகத்தில் தான் விபத்து மற்றும் பிற அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகள் தொடங்கி டாக்டர்கள் வரை மூக்கை பிடித்தபடி வார்டுக்குள் செல்கின்றனர். மருத்துவமனையின் தனியார் ஏஜன்சி பணியாளர்கள் மீண்டும் குப்பையை ஓரமாக மீண்டும் குவித்து வைத்துள்ளனர். எப்போது மழை பெய்தாலும் சுற்றுப்புறம் முழுவதும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் அளவிற்கு குப்பை குவிந்துள்ளது. அரசு மருத்துவமனை பழைய வளாகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் செப். 1ம் தேதி மட்டும் குப்பை அள்ளப்பட்டது. அதன்பின் 6 நாட்களாக மலைபோல தேங்கி கிடக்கிறது குப்பை.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்ட போது தனியாக டிராக்டர் மூலம் குப்பை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனை தணிக்கையில் இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் பிரச்னையானது. இதேபோல மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து வெள்ளக்கல் குப்பைக்கிடங்கு வரை தினமும் குப்பையை கொண்டு செல்ல தேவைப்படும் லாரி, பணியாளர்களின் செலவுகளை யார் ஏற்பது.
மாநகராட்சி குப்பை அள்ள மறுப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற வரும் போது சுகாதாரக் கேட்டால் கூடுதல் பிரச்னைக்கு ஆளாகின்றனர். டாக்டர்கள், பிற பணியாளர்கள் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு குப்பை மேலாண்மைக்கு தீர்வு காணவேண்டும்.