Politics
செலவுகளைக் குறைத்து மேன்மையைக் கூட்டுவாரா முதல்வர்?
ஈரான் மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை அடுத்து, உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், இந்தியாவையும் பாதிக்கும் என்று அனுமானிக்கப்பட்டது.

தமிழகத்தின் நிதி நிலைமையின் யதார்த்தம் புரிந்து, அனைவரும் அரசோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கும் நிலையில், த.வெ.க அரசின் சமீபகால நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆட்சிக்கு வந்தே இரண்டே மாதங்களில் 22 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கிய த.வெ.க அரசு, மூன்று மாதங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்திருப்பதாக அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்காகத் தண்ணீர் திறந்து விடுவதற்காக, சில நாள்களுக்கு முன்பு சென்று திரும்பியிருக்கிறார், முதல்வர். மேட்டூர் நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியிருப்பதற்காக அரசுத் தரப்பில் செலவிட்டதாகச் சொல்லப்படும் தொகை மூச்சு முட்டவைக்கிறது. தொடக்கத்தில் மேட்டூர் பயணத்துக்கு 4.5 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அது 6 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது.
அதாவது, முதல்வர் செல்லும் பாதையில் 40 கிலோமீட்டர் தூரத்துக்கு, சாலையின் இருபுறமும், சாலைக்குள் மக்கள் வராமல் பார்த்துக்கொள்வதற்காக இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காகவே இவ்வளவு பெரிய தொகை செலவு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் சொல்கின்றனர்.
ஜூன் 12-ல் வழக்கமாகத் திறக்கப்படவேண்டிய மேட்டூர் அணையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இல்லாததால், இத்தனை மாதங்கள் கழித்து மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர்கூட, விவசாயிகளின் பாசனத்துக்குப் போதுமானதாக இருக்காது என்று சர்ச்சை கிளம்பியிருக்கும் சூழலில்தான், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மேட்டூருக்குச் சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய். `முதல்வர் நேரில் சென்றுதான், பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டுமா?’ என்ற கேள்வி, இப்போது எழுப்பப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை அடுத்து, உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல், இந்தியாவையும் பாதிக்கும் என்று அனுமானிக்கப்பட்டது. இந்த நிலையில், தன்னுடைய பாதுகாப்பைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்தார் பிரதமர் மோடி. கூடுதல் வாகனங்கள் பாதுகாப்புக்காகப் பின்தொடரும் நிலையில், எரிபொருள் வீணாவதைத் தடுக்கலாம் என்ற நோக்கத்தில், அப்படியோர் அறிவிப்பைப் பிரதமர் வெளியிட்டார். இதையடுத்து, அனைத்து மாநில முதல்வர்களும் இத்தகைய செலவு குறைப்புப் பணிகளில் தாங்களாகவே ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு தமிழகத்தில் மட்டும் பொய்யாகியிருப்பதாகச் சொல்கின்றனர்.
பல லட்சம் கோடி ரூபாய் கடனை, தன் தலையில் சுமந்துகொண்டிருக்கும் தமிழகம், வீணான செலவு களைக் குறைப்பதில் எவ்வளவு முனைப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆதங்கம். சுமார் 400 கோடி ரூபாய் எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்குவதாகப் போடப்பட்ட திட்டம், மேட்டூரில் தண்ணீர் திறக்கச் சென்றதற்கு 6 கோடி ரூபாய் செலவு போன்றவை, தமிழகத்தின் நிதி நிலைமையை, இன்னும் படுபாதாளத்துக்கு இட்டுச் செல்லும். முதல்வர் விரும்பாமலேயே இதெல்லாம் நடக்கின்றன என்று த.வெ.க தரப்பில் சொல்லப்பட்டாலும், அதைச் சப்பைக்கட்டாகவே சமூகம் பார்க்கிறது. முதல்வர் விரும்பாமலேயே நடந்தாலும்கூட, இப்படிப்பட்ட செலவின ஏற்பாடுகளை அவர்தான் முன்னின்று தடுத்திருக்க வேண்டும். வேறு யாரையும் காரணம் காட்டி, அவர் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
அதுதான் அவர் வகிக்கும் பதவியின் மேன்மையைக் கூட்டுவதோடு, தமிழகத்தின் நலனையும் பாதுகாக்கும்.
