Politics
எல்லா வளங்களையும் எடுக்க அனுமதிப்பதால் ஆந்திராவுக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன: காங்., தமிழக தலைவர் கண்டுபிடிப்பு

விருதுநகர்: ''எல்லா வளங்களையும் எடுத்துக்கொள்ள ஆந்திரா அனுமதிப்பதால், அந்த மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன,'' என, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
விருதுநகரில் அவர் அளித்த பேட்டி: டில்லியில், 'ஊழலுக்கு எதிரான கட்சி' எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஊழல் குற்றச்சாட்டுகளாலேயே தோற்றுப்போனது.
தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம் அவசியம். ஆனால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்கள் வசிப்பதால், அவர்கள் நலனை முதல்வர் விஜய் பாதுகாத்து, புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும்.
தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு உள்ளது. காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், புதிதாக தொழிற்சாலைகள் எதுவும் அமைக்க முடியவில்லை.
ஆனால், ஆந்திராவில், 'எந்த வளத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளனர். அதனால், அந்த மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் செல்கின்றன.
ஒரு வாரமாக, காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்ததால், தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது.
வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது, சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், பேருந்து தொடர்பாக எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.