Arts, culture, entertainment and media
“சன்ன ரக நெல்லுக்கு நிகராக மோட்டா ரகத்துக்கும் விலை வேண்டும்!”
உழவு, அடியுரம், மேலுரம், களையெடுப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறு வடை ஆகியவற்றுக்கான செலவுகள்... இந்த இரண்டு ரகங்களுக்குமே ஒன்றுதான்

விவசாயிகள் கோரிக்கை!
கடந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், போதுமான அளவுக்கு மழைப் பொழிவு இருந்ததாலும்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடிப் பட்ட நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இல்லாததால், டெல்டா பாசனத்துக்குக் காவிரி நீர் திறப்பு, இரண்டரை மாதங்களுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். `குறுவைச் சாகுபடி கைவிடப்பட்ட நிலையில் சம்பா மற்றும் தாளடியாவது கை கொடுக்குமா?' என்ற கவலையில் உள்ளனர், விவசாயிகள்.
இந்த நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடிப் பட்ட நெல் சாகுபடிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் விவ சாயிகள், தமிழக அரசுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.
``இந்த இரு மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள், பெரும்பாலும் களிமண் சார்ந்தது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதத்தில் டெல்டா பகுதியில் கனமழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படுவது வழக்கம். கடுமையான மழையையும், வயல்களில் தேங்கும் அதிகப்படியான நீரையும் தாங்கி நிற்கும் வல்லமை சன்ன ரகங்களை விட மோட்டா ரகத்துக்கே அதிகம் உள்ளது. இதன் காரணமாகவே, இப்பகுதிகளில் நெற்பயிர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேல் மோட்டா ரகங்களே பயிரிடப் படுகின்றன.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலையைவிட, மோட்டா ரக நெல்லுக்கான கொள்முதல் விலையைக் குறைத்து வழங்குகின்றன. இது ஏற்புடையதல்ல.
உழவு, அடியுரம், மேலுரம், களையெடுப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறு வடை ஆகியவற்றுக்கான செலவுகள்... இந்த இரண்டு ரகங்களுக்குமே ஒன்றுதான். எங்கள் பகுதியில் உள்ள களிமண் பாங்கான நிலங் களில் சன்ன ரக நெல் பயிர் செய்தால், தொடர் கனமழை மற்றும் வெள்ளநீரால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வேறு வழியில்லாத காரணத்தால்தான் மோட்டா ரக நெல் சாகுபடி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறோம். இந்த நிலையில் மோட்டா ரக நெல்லுக்கான கொள்முதல் விலையைக் குறைத்து வழங்குவது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசு ஊக்கத்தொகையைச் சேர்த்து, சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.2,750 (ஆதரவு விலை ரூ.2,461 + ஊக்கத்தொகை ரூ.289) கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. அதேவேளையில், மோட்டா ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.2,600 (ஆதரவு விலை ரூ.2,441 + ஊக்கத்தொகை ரூ.159) மட்டுமே கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
``சன்ன ரகத்துக்கு அதிக விலை கிடைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இயற்கைச் சூழல் காரணமாக மோட்டா ரகத்தையே 70% அளவு சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் விவசாயிகளுக்கு இது ஒரு பின்னடைவாக உள்ளது’' என்கிறார்கள், இந்தப் பகுதி விவசாயிகள்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள முதல்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேதுராமன், ``ரேஷன் கடைகளில் மோட்டா ரக அரிசியை மக்கள் விரும்புவதில்லை என்ற காரணத்தினால் இவ்வாறு விலை வழங்குவதாக அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். அந்த பிம்பத்தை உடைக்க வேண்டும். அரசு, ரேஷன் அரிசியை `டபுள் பாயிலிங்' செய்வதற்கு பதிலாக, தனியார் அரவை ஆலைகளைப் போல `சிங்கிள் பாயிலிங்' செய்து, சரியான ஈரப்பதத்தைப் பராமரித்து விநியோகித்தால், மோட்டா ரக அரிசியும் சமையலுக்கு மிகச் சிறந்த தரத்துடன் இருக்கும். இதனால் அரசுக்குச் செலவும் குறையும், மோட்டா ரகம் பயிரிடும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
இந்த வருடம் எல் நினோவால் வடகிழக்குப் பருவமழை மிக அதிகமாகப் பெய்யும் என்கிறார்கள் வல்லுநர்கள். எனவே, இந்த இரு மாவட்டங்களிலும் மோட்டா ரகம் பயிரிட்டால்தான் மகசூல் பார்க்க முடியும். சன்ன ரகம் பயிரிட்டால் மழையாலும் தேங்கும் தண்ணீராலும் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்.
சன்ன ரகத்துக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகையை, பொதுவாகத் தமிழக விவசாயிகள் பாராட்டினாலும் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மோட்டா ரகமே பயிரிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
எனவே, `மோட்டா ரகம் என அழைக்கப்படும் பொது ரகத்தின் ஊக்கத்தொகையையும் உயர்த்தித் தர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’’ என்றார்.
தமிழக முதல்வர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
