Arts, culture, entertainment and media
ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் ‘டிராபிக்’ ஜாம்

விழுப்புரம்: விழுப்புரம் எம்.ஜி., ரோடு மார்க்கெட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் எம்.ஜி., ரோடு, பகர்ஷா வீதி ஆகியவை மளிகை முதல் காய்கறிகள் கடைகள் வரை உள்ள மார்க்கெட் பகுதியாக செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு சாலைகளிலும், நீண்ட காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகளால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எம்.ஜி.,ரோட்டில், 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு முன்பு, 500க்கும் மேற்பட்ட பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்புகளாக உள்ளது. வீரவாழியம்மன் கோவில் துவக்கத்திலேயே சாலை முகப்பு முதல் பழக்கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள், பொரி கடலை, தேங்காய் கடைகள், பூட்டு சாவி கடைகள், பூண்டு கடைகள் என எம்.ஜி., ரோட்டில், கடைகளுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முகூர்த்த தினங்கள், விழா காலங்களில் உள்ளே செல்ல முடியாமல் வாகனங்கள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பால், வியாபாரிகள், பொதுமக்கள் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், இங்கள் கடைகளுக்கு பொருட்களை இறக்க வரும் லாரிகள் சாலையின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மெத்தனமாக உள்ளனர். இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, எம்.ஜி., ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தி பொருட்களை இறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.