Arts, culture, entertainment and media
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அலட்சியம்
வால்பாறை: வால்பாறையில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், மக்கள் நெருக்கம் மிகுந்த பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டேன்மோர் சந்திப்பு வரையிலான ரோட்டில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன.
ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளாலும், சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
இதனால், நெடுஞ்சாலைத்துறை ரோடு நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘குறுகலான ரோட்டை விரிவுபடுத்தும் வகையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. மக்கள் நடைபாதையை பயன்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.