திண்டுக்கல்லில் அதிநவீன ஆதார் சேவை மையம் திறப்பு

தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்பதிவு இணையதளமான https://bookappointment.uidai.gov.in/ மூலமாகவும், ஆதார் சேவை மையங்களில் ஆதார் சேவைகளைப் பெறுவதற்கு மக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
திண்டுக்கல் நகரில் வசிப்போருக்கு ஆதார் சேவைகளை எளிதில் வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திண்டுக்கல்லில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆதார் சேவை மையத்தை இன்று (04 செப்டம்பர் 2026) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர் ஜெயபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த ஆதார் சேவை மையத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகப் பிரிவு அதிகாரி, பிற அதிகாரிகள், ஆதார் சேவை மையப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தனித்துவ அடையாள ஆணையத்தின் இந்த முயற்சியைப் பாராட்டிய மாவட்ட வருவாய் அலுவலர், சேவை மையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், அங்குள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், ஆதார் பதிவையும் விவரங்களைப் புதுப்பிக்கும் நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மக்களுக்குத் தடையற்ற ஆதார் சேவைகளை வழங்கும் வகையில், திண்டுக்கல் ஆதார் சேவை மையத்தில் 4 செயல்பாட்டுக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இம்மையம் செயல்படுவதால், மக்கள் சேவைகளைப் பெறுவதில் அதிக வசதியும் எளிமையும் உறுதி செய்யப்படுகிறது. ஆதார் பதிவு, பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல், ஆதார் சார்ந்த சேவைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இங்கு வழங்கப்படுகின்றன.
ஆதார் எண் வைத்திருப்பவர்களின் குறைகளையும் இம்மையம் பெற்று, மண்டல அலுவலகம் மூலம் அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதையும் வாசிக்க: https://tamil.news18.com/photogallery/international/africa-true-size-un-vote-equal-earth-vs-mercator-projection-2202365.html
திண்டுக்கல்லில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் செயல்பாட்டில் உள்ள ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 16 மையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. இதன் மூலம் மாநிலத்தில் தனித்துவ அடையாள ஆணையத்தால் நடத்தப்படும் ஆதார் சேவை மையங்களின் மொத்த எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும்.
