Politics
“ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்” - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து, உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என ஆசிரியர் தினத்தையொட்டி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மாணவர்களைப் பண்படுத்துவதோடு, அவர்களின் அறிவையும் ஆளுமையையும் வளர்த்து, சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. தோழமையுடன் வழிகாட்டியும், தேவையான நேரங்களில் கண்டிப்புடன் நல்வழிப்படுத்தியும் மாணவர்களைச் செதுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சிறந்த ஆசிரியராகவும் கல்வியாளராகவும் விளங்கியவர். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர்களின் கவனம் முழுமையாகக் கற்பித்தலில் இருக்க வேண்டிய சூழல் உருவாகவில்லை. வகுப்பறைப் பணிக்கு அப்பால் பல்வேறு அரசுப் பணிகள் ஒப்படைக்கப்படுவதுடன், குறுகிய காலத்தில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய அழுத்தமும் உள்ளது. ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதால், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
தற்காலிக ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகளும் தொடர்ந்து நீடிக்கின்றன. இத்தகைய சூழல் ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு, கற்பித்தலின் தரத்தையும் பாதிக்கக்கூடும். எனவே, ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்பித்தல் அல்லாத பணிகளைக் குறைத்து, அவர்கள் மாணவர்களின் கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதியப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து, அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாகும். ஆசிரியர் தினத்தில் கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)