Education
ராணுவ தேர்வில் ஆள்மாறாட்டம்; உ.பி., வாலிபர்கள் இருவர் கைது

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், எழுத்தர் முதல் தொழில்நுட்பம் வரை, 10 பிரிவுகளுக்கான தேர்வு ஒரு வாரமாக நடந்து வருகிறது .
இந்த தேர்வில், உத்தர பிரதேசம், பிரோஸாபாத் மாவட்டம், ஜலால்புரியை சேர்ந்த பண்டி குண்டல், 25, என்பவரின் ஆவணங்களை வைத்து, மதுரா மாவட்டம், சோங்க் தேஹத் பகுதியை சேர்ந்த, விஷு பிரதாப் துபே, 22, என்பவர் தேர்வு எழுத உள்ளே வந்துள்ளார்.
தேர்வு கூடத்தில், பயோமெட்ரிக் சரிபார்ப்பு சோதனையின்போது, ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.
ராணுவ கல்லுாரி நிர்வாகம் புகாரில், வெலிங்டன் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலி ஆவணங்கள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த வாரம் நடந்த தேர்வில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் இதேபோல் கைது செய்யப்பட்டனர்.
ஆள்மாறாட்ட மோசடி பின்னணியில், பெரிய அளவிலான தேர்வு முறைகேடு கும்பல் அல்லது இடைதரகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.