Lifestyle and human interest
வேகமாக பரவுது! மூட்டு வலி, தலை வலியுடன் கூடிய குளிர் காய்ச்சல்: ஒரு வாரத்திற்குமேல் முடக்கிவிடுவதால் மக்கள் அச்சம் அலட்சியம் வேண்டாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை
- நமது நிருபர் - சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தலைவலி,

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தலைவலி, மூட்டுவலி, தொண்டை வலி என, ஒருவாரத்திற்கு மேல் பாதிப்பு நீடிப்பதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும்; அலட்சியம் வேண்டாம் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் பகலில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில் மழைப் பொழிவு இருந்து வருகிறது.
இந்த காலநிலை மாற்றத்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மனிதர்களுக்கு பல்வேறு வகையான உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக மக்கள் வரிசை கட்டி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், எழுந்து நடக்கக்கூட முடியாத அளவில் முடங்கி விடுகின்றனர். உடல் முழுதும் வலி, எலும்பிலும் வலி ஏற்படுவதே இதற்கு காரணம்.
என்னதான் சிகிச்சை எடுத்தாலும், பிரச்னை தீர்வதில்லை. காய்ச்சல் சற்று குறைகிறது; ஓரிரு நாளில் மீண்டும் கொதிக்க ஆரம்பித்து விடுகிறது. உடல் வலி தீர்வதாகவே இல்லை.
பெரும்பாலானோருக்கு காய்ச்சல் சரியானாலும், தலைவலி, மூட்டுவலி, தொண்டை வலி, வறட்டு இருமல், உடல்சோர்வு என, ஒருவாரம், ஒரு வாரத்திற்குமேல் நீடித்து வருவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி விடுகிறது.
ஒருவருக்கு பாதிப்பு வந்தால், அடுத்தடுத்து குடும்பத்தில் உள்ளோரும் பாதிக்கும் சூழலும் தொடர்கிறது. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு பொதுநல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால், வைரஸ்கள் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தற்போது, 'இன்ப்ளுயன்ஸா ஏ' வகை காய்ச்சல், அடினோ வைரஸ், ஆர்.எஸ்.வி., எனும் ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரஸ், கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் வைரஸ் ஆகியவை சுவாசப்பாதை வழியே எளிதாக பருவுகின்றன.
இதில், இன்ப்ளுயன்ஸா அடினோ வைரஸால், குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிக்கப்படுகின்றனர். 101 பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல், பின் சளியுடன் இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது.
இதில், குழந்தைகளின் நுரையீரல்களில் நிமோனியா தொற்று ஏற்பட்டு, மூச்சு விட சிரமப்படலாம். சரியாக கவனிக்க தவறினால், மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும்.
அதேபோல், கை, கால், வாய் நோய் என்ற தக்காளி காய்ச்சல், குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இவை ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும் தொற்றாக உள்ளது.
எனவே, நோய் பாதிப்பு ஏற்பட்டோரை கட்டாயம் வீட்டிலேயே வைத்து பராமரிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி, வேலைக்கு அனுப்பக்கூடாது. இதன் வாயிலாக, மற்றவர்களுக்கும் பரவுவதை தடுக்கலாம்.
மக்கள் நிறைந்த பகுதிகளில், முக கவசம் அணிதல், சோப்பு போட்டு கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றின் வாயிலாக பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
அத்துடன், தினமும் இரண்டு முட்டை சாப்பிட வேண்டும். இறைச்சி, மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா, பனீர் போன்ற புரத சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
தற்போது டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. எனவே, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வந்தால், சுயமாக மருந்து உட்கொள்ள கூடாது. டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்.
இந்த வைரஸ் ஒரு வாரத்தில் குணமாக கூடியது என்றாலும், அலட்சியம் காட்டினால் சிலருக்கு ஆபத்தாக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.