இனியாவது மாறுமா: தரமற்ற தயாரிப்பால் விரைவில் மின்கம்பங்கள் சேதம்: விபத்து அபாயம், மின்சப்ளை சீர்குலைவால் தவிப்பு

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மின்கம்பங்கள் தரம் குறைவாக இருப்பதால் விரைவில் கான்கிரீட் சிதைந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இவற்றில் ஏறி பணி செய்ய ஊழியர்கள் தயங்குவதால் சப்ளை துண்டிப்பு பிரச்னை, தெருவிளக்கு பழுது போன்றவற்றை உடனடியாக சீரமைக்க முடியாத நிலை உள்ளது.
மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்கள் இன்றும் ஸ்திரமாக நிற்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்களின் தயாரிப்பு தரம் குறைவாக இருப்பதால் வெகு சில ஆண்டுகளிலே சிதைந்து பலவீனமாகி பரிதாபமாக உள்ளன.
மின்கம்பங்களை பொருத்தவரை கான்கிரீட்டும் அதனுள் இருக்கும் இரும்பு கம்பியும் சேர்ந்தே பலம் தருகிறது. ஒன்று பலமிழந்தாலும் மின்கம்பத்தின் ஆயுள் வெகுவாக குறைந்துவிடும். கான்கிரீட் சிதைந்த பகுதிக்குள் இருக்கும் இரும்பு கம்பியின் மீது படும் ஈரப்பதம் காரணமாக வெகு விரைவில் துருப்பிடித்து கம்பம் சிதைந்து பலமிழக்கிறது. கம்பியின் இழுதிறன், எடையால் கம்பம் உடைந்து விழும் ஆபத்தாக மாறுகிறது.
கம்பி துருப்பிடித்து சிதைந்த கம்பத்தில் ஏறி பழுது நீக்க ஊழியர்கள் தயங்குகின்றனர். இதனால் வீடுகளில் மின்சப்ளை துண்டிக்கும் நிலையிலும், தெருவிளக்கு பழுதானாலும் அதனை சீரமைப்பதிலும் சிக்கல், தாமதம் ஏற்படுகிறது. அதிக அழுத்தம் தரப்பட்டால் மட்டுமே பணி நடக்கும் சூழல் இருப்பதால் மக்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலைக்கு காரணம் மின்கம்பம் தயாரிப்பில் தரத்தை பராமரிக்க அதிகாரிகள் அக்கறை காட்டாததே. இனிமேலாவது தரமான முறையில் மின்கம்பங்களை தயாரித்து நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்கும் வகையில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிதாப நிலையில் மின்கம்பங்கள் தங்கவேல், சமூக ஆர்வலர், அய்யலுார் மணியகாரன்பட்டி: வடமதுரை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட ஏராளமான மின்கம்பங்கள் இன்றும் சேதமாகாமல் ஸ்திரமாக பயன்பாட்டில் உள்ளன. ஆனால் சமீப ஆண்டுகளில் புதிய மின்பாதை விஸ்தரிப்பில் நடப்பட்ட மின்கம்பங்கள் வெகு சில ஆண்டுகளிலே கான்கிரீட் சிதைந்து பலவீனமாகி பரிதாபமாக உள்ளன. பல இடங்களில் சுற்றிலும் கான்கிரீட் சிதைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பியும் ஈரப்பதத்தால் துருப்பிடித்து ஸ்திரமற்ற நிலையில் இருப்பதால் கம்பத்தில் ஏறி பணி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வீடுகளில் சப்ளை துண்டிப்பு, தெருவிளக்கு பழுது போன்ற நேரங்களில் ஊழியர்கள் கம்பத்தில் ஏறி பணி செய்வதில் சிக்கல், சிரமம், ஆபத்து உள்ளது. இதனால் கிரேன், மண் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தி பணி செய்யும் போது அதிக செலவாகிறது.