Lifestyle and human interest
ஓராண்டில் சேதமான தடுப்பு கம்பிகள் தரம் குறைவு என மக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் நான்கு சாலை சந்திப்பில், ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் ஒரே ஆண்டில் சேதமடைந்துள்ளதால், தரம் குறைவாக அமைக்கப்பட்டதே காரணம் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், ஆவடியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன. கலெக்டர் அலுவலகம் அருகே, நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது.
இங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டை, இடதுபுறம் மருத்துவக் கல்லுாரி செல்லும் சாலை பிரிகிறது. நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், சாலை குறுகலாக இருந்ததால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்பட்டு வந்தன.
இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், கடந்தாண்டு இறுதியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், டோல்கேட் சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. மேலும், ரவுண்டானாவைச் சுற்றிலும், மருத்துவ கல்லுாரி சாலையிலும், துருப்பிடிக்காத தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், மருத்துவக்கல்லுாரி சாலையில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் உடைந்துள்ளன. இதற்கு காரணம், நெடுஞ்சாலை துறையினர், தரமில்லாத தடுப்பு கம்பிகள் அமைத்ததே என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த தடுப்பு கம்பிகளை சீரமைத்து, தரமில்லாமல் அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டர் கவிதாவிற்கு, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.