Politics
கட்சி பொறுப்புக்கு ரூ.15 லட்சம் பேரம்
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் த.வெ.க.,வில் நகர் பொருளாளர் பதவி வாங்கிதர ரூ. 15 லட்சம் வரை நிர்வாகிகள் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சாயல்குடியில் வணிகர் சங்க மாநிலதுணை தலைவர் பெத்தராஜ் கூறியதாவது:
எனது உறவினருக்கு த.வெ.க., நகர பொருளாளர் பதவி வாங்கி தருவதாக ஒன்றிய நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் மதனிடம் அழைத்து சென்றார். அங்கு வைத்து ரூ.15 லட்சம், அதன்பிறகு ரூ. 5 லட்சம் என பேரம் பேசியதால் பதவி வேண்டாம் என திரும்பி வந்து விட்டோம்.
இது தொடர்பாக சிலரிடம் பேசியதால் ஆத்திரமடைந்த த.வெ.க., நிர்வாகிகள், பஜாரில் இருந்த என்னை தரக்குறைவாக பேசி மிரட்டினர். இதுதொடர்பாக ஆடியோ, வீடியோ உள்ளது. கட்சித் தலைமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் கூறியதாவது: நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. இது குறித்த விஷயம் இப்பொழுது தான் எனக்கு தெரிய வந்தது. த.வெ.க., சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. என்னை பற்றி அவதுாறு பரப்புகின்றனர். எனக்கு எதுவுமே தெரியாது, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.