வனப்பணி படையை வலுப்படுத்த ரூ.100.72 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் ரஞ்சித்குமார் தகவல்
''அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
↓வனப்பணி படை, 100.72 கோடி ரூபாய் மதிப்பில் மறு சீரமைக்கப்படும். வனத்தீ மேலாண்மை திட்டம், 60.58 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்
↓அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும்
↓வன ஆராய்ச்சி நிறுவனம், 5 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்படும்.
↓இன வரைவியல் கணக்கெடுப்பு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, 43 இயற்கை ஆர்வலர் பயிற்சியாளர்கள், 4.20 கோடி ரூபாய் செலவில் ஈடுபடுத்தப்படுவர்
↓தென் மாவட்டங்களில், நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் செயல் படுத்தப்படும்
↓பனை மரங்களின் மரபணு பாதுகாப்பு திட்டம், 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
↓ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் தனித்துவமான உயிரினங்கள் மற்றும் தாவர இனங்கள் குறித்து, மாவட்ட உயிரியல் பன்முகத்தன்மை சின்னங்கள், 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
↓மனித - வன விலங்கு மோதல் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு வழங்கப்படும், இழப்பீட்டு தொகை உயர்த்தப்படும்
↓பிச்சாவரத்தில் படகு சவாரி செய்ய, 2 கோடி ரூபாய் மதிப்பில், சூரிய ஆற்றல் அல்லது மின்னாற்றலில் இயங்கும் ஐந்து படகுகள் வாங்கப்படும்.
↓சீருடைப் பணியாளர்களுக்கு, 1.50 கோடி ரூபாயில், இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட்' அடையாள அட்டையாக வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.