Politics
பெண்கள் வாழ தகுதியான மாநிலம்தானா தமிழகம்?

இந்தச் சமூகத்தில் பெண்களைச் சீண்டுவதையும், தாக்குவதையும், ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் ஆண்கள் தங்களின் ஏகபோக உரிமையாகவே கருதுகின்றனர். அப்படித்தான் குடும்பங்கள் அவர்களை வளர்த்தெடுக்கின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருநூற்றுக்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் பாதிக்குப் பாதி குழந்தைகள் மீதானவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால், அது வெறுமனே ஆட்சி மாற்றத்தால் நிகழவில்லை. தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவுகளின்படி, 2021 - 2024 (2025-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்படவில்லை.) வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1,689 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 20,871 போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல 2016-2020 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1,684 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், சுமார் 10,000 போக்சோ வழக்குகளும் பதிவாகி யுள்ளன. `தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த த.வெ.க ஆட்சியிலும் பாலியல் வன்கொடுமை களுக்குப் பஞ்சமில்லை.
பச்சிளம் குழந்தை தொடங்கி மூதாட்டி வரை, மாணவி முதல் ஆசிரியை வரை, நோயாளி தொடங்கி மருத்துவர் வரை, கான்ஸ்டபிள் தொடங்கி ஐ.பி.ஸ் வரை, கடைநிலை அலுவலர் தொடங்கி உயரதிகாரி வரை, ஏழை முதல் பணக்காரர் வரை, தொண்டர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முதல் ஆதிக்கச் சாதி வரை இந்தச் சமூகத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு அப்பாற்பட்டவராக இல்லை.
அதேபோல குற்றங்களை இழைப்பவர்களும் உறவினர், சிறியவர், முதியவர், அந்நியர், முதலாளி, தொழிலாளி, தொண்டர், தலைவர், பிற்போக்கு, முற்போக்கு என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் தரப்பு ஆண்களுமாக இருக்கின்றனர். இது எதை உணர்த்துகிறது எனில், இந்தச் சமூகமே பழக்க முறையில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களாகவும் (Habitual Offenders) எக்கணமும் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தச் சாத்தியமுள்ளவர் களாகவும் (Potential Rapists) உள்ள பேரவலத்தை!
நிச்சயமாக, இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு அல்ல.
பொதுவாக, நாம் பாலியல் வன்கொடுமை களை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறும் உதிரி நிகழ்வுகளாக, தனிநபர் களின் குற்றச் செயலாகவே கருதுகிறோம். ஆனால் எந்த நேரத்தில், எந்த ஆணும் வன்கொடுமையில் ஈடுபடும், எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடிய சூழலைக்கொண்ட பண்பாட்டுக் குற்றம். இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடமும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கப்படுகிறார். அதுவே தமிழகத்தில் ஒவ்வொரு 24 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தையோ, பெண்ணோ பாலியல்ரீதியாகத் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை இது மிகக் குறைவான மதிப்பீடு என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். காரணம் பொதுமக்களின் `சமூகக் களங்கம்’ குறித்த அச்சம்.
ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பெரும்பாலும் நகர்ப்புறங்கள் சார்ந்தவையாகவே இருக்கின்றன. கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், கொலையாக மாறினாலே ஒழிய பெரிய அளவில் வெளியில் வருவதில்லை. காரணம், பொதுவாக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் 90 சதவிகிதத்துக்கும் மேல் சொந்தக்காரர் அல்லது சொந்தச் சாதிக்காரர் என்பதே! ‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்’ என்ற அடையாளம், குடும்ப கௌரவத்தையும் பெண்ணின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்ற பயத்தாலும், நீதிமன்றம், வாய்தாவென நீண்ட காலம் அலைய நேரிடும் என்ற தயக்கத்தாலும் பெருமளவிலான குற்றங்கள் காவல் நிலையங்களுக்கே வராமல் மறைக்கப்படுகின்றன. வந்தாலும் அவை காதும் காதும் வைத்தாற்போல சமரசம் செய்து கொள்ளப்படுவதாக முடித்து வைக்கப்படுகின்றன. இதில் தலித் பெண்களின் நிலை இன்னும் மோசம். சாதி, பாலினம், வறுமை ஆகிய மும்முனை ஆயுதத்தால் அவர்கள் முடக்கப்படுகின்றனர்.
இந்தச் சமூகத்தில் பெண்களைச் சீண்டுவதையும், தாக்குவதையும், ஒடுக்குவதையும், சுரண்டுவதையும் ஆண்கள் தங்களின் ஏகபோக உரிமையாகவே கருதுகின்றனர். அப்படித்தான் குடும்பங்கள் அவர்களை வளர்த்தெடுக்கின்றன. ஒரு பெண்ணின் எல்லாச் சூழ்நிலைகளையும் அத்து மீறுவதற்கான வாய்ப்பாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையை மாற்றாமல் இந்தக் கொடுமை எப்படி மாறும்... பாலியல் வன்கொடுமை என்பது வெறுமனே கட்டுப்படுத்த முடியாத பாலியல் வெறி சம்பந்தப்பட்டதில்லை. அது இந்தச் சமூகத்தின் ஆணாதிக்க மற்றும் பிற்போக்கு உளவியலின் முக்கிய விளைவு. பெண் குழந்தையின் பிறப்பையே விரும்பாதவர்கள் நாம். இந்தக் காலத்திலும் ஆண் குழந்தைகளே தமிழக/இந்தியக் குடும்பங்களின் ஒரே வாரிசுத் தேர்வாக இருக்கின்றன. முற்போக்கு (!) தமிழ்நாட்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகளே உள்ளனர். ‘பாலினத் தேர்வு அடிப்படையிலான கருக்கொலைகளும், செயற்கை கருத்தரித்தல்களும் குற்றம்’ எனச் சட்டம் சொன்னாலும், மக்கள் அதை மதிப்பதாக இல்லை. பெண் குழந்தைகள் குப்பைத்தொட்டியிலும் புதர்களிலும் வீசியெறியப்படும் சம்பவங்கள் சமகாலத்தின் பெருங்கொடுமையாகவே நீடிக்கின்றன.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது பொங்கி எழும் பொதுச் சமூகம்தான், ஓடி ஓடி குழந்தைத் திருமணங்களையும் நடத்துகிறது. குழந்தையைப் பொறுத்தவரை ஒப்புதலோடு நிகழ்ந்தாலும், அது வன்புணர்ச்சி என்றே சட்டம் வரையறுக்கிறது. ஆனால் பெற்றோருக்கு அது குறித்த கவலையில்லை. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு நாளில் பத்து குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக 2022-ல் வெளியான ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. குழந்தையை ஒரு வளர்ந்த பெண்ணாக, வெறும் உடலாக, பாலியல் பண்டமாக பார்க்கப் பழக்கியதில் குழந்தை திருமணப் பண்பாட்டுக்குப் பங்கில்லையா?
இங்கே ஏன் இத்தனை போக்சோ குற்றங்கள் நிகழ்கின்றன என்ற சமூகவியல் ஆய்வை இதுவரைக்கும் அரசு செய்யவில்லை. பிங்க் ரோந்துப் படை, சிங்கப்பெண் அதிரடிப் படையால் தெருவில் நடக்கும் குற்றங்களையே தடுக்க முடியாதபோது, வீட்டுக்குள் தொட்டிலில் கிடக்கும் குழந்தைக்கு அவற்றால் எப்படிப் பாதுகாப்பளிக்க முடியும்... ஊட்டி வளர்க்கப்படும் ஆணாதிக்கச் சிந்தனை, ஊற்றிக் கொடுக்கும் போதை கலாசாரம், கட்டற்று கிடைக்கும் போர்னோகிராபி எல்லாம் சேர்ந்து குழந்தைகளைப் பாலியல் வெறியின் எளிய இலக்காக்குகின்றன. நாம் எந்தப் புள்ளியையும் இணைத்துப் பார்ப்பதில்லை.
இப்படியாக, கருக்கொலை தொடங்கி வரதட்சணை, ஆணவக்கொலை என, பெண்ணுக்கெதிரான எல்லாக் குற்றங்களையுமே தமிழ்ச் சமூகம் கலாசாரமாகவே கடைப்பிடிக்கிறது. பாலியல் வன்கொடுமையும் அதன் நீட்சியே ஆகும்! பாலின சமத்துவமற்ற சமூகத்துக்கு, பாலுறவுக்கும் வல்லுறவுக்கும் வித்தியாசம் தெரியாது. `ஒப்புதல்’ (Consent) என்ற வார்த்தையே அதன் அகராதியில் இருக்காது.
“கணவனின் வல்லுறவு தாம்பத்ய உறவே ஆகும்; கோபமான பெண்களை வல்லுறவு செய்தால் அவர்கள் அடங்கிவிடுவார்கள்; ஒரு பெண் சிரித்துப் பேசுவது ஆண்களைக் கவர்வதற்காகவே. எனவே, அவர்களிடம் அத்துமீறலாம்; ஆண் நண்பர்களைக்கொண்ட பெண்களையும் இரவில் வெளியே இருக்கும்போது பாலியல் வன்கொடுமை செய்யலாம்; பாலியல் வன்கொடுமை பெண்ணுக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது; எந்த ஆணின் தொடுகையும் பெண்ணைக் கிளர்ச்சியடையவே வைக்கும்; பாலியல் வன்கொடுமையில் பெண்ணின் `வேண்டாம்’ என்பதற்கு `வேண்டும்’ என்பதே பொருள்.” – இப்படியான ஆபத்தான கற்பிதங்கள் ஆண் மூளையில் நிரம்பி வழிகின்றன. பல ஹீரோயிச திரைப்படங்கள் இப்படியான ஆபத்தான கற்பிதங்களை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றின.
இப்படி, இந்த ஆணாதிக்கச் சமூகம் கருத்தரிப்பிலிருந்து தம் காலுக்கடியில் வைக்கும் கண்ணி வெடிகளுக்குப் பலியாகாமல் தப்பிப்பதே இங்கே வாழ்க்கையாகப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வீடுகளில் சட்டத்துக்குப் புறம்பாகப் பெண்களை வதைத்துக்கொண்டே, வீதியில் பாதுகாப்பை உறுதிசெய்யக் கடுமையான தண்டனைச் சட்டங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2012-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக வன்புணரப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார் மருத்துவ மாணவி நிர்பயா. உலகையே உலுக்கிய வழக்கு அது. அவர் பெயரில் ‘நிர்பயா சட்டம்’ (குற்றவியல் திருத்தச் சட்டம் 2013) பெரும் போராட்டங்களுக்கிடையே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் உண்டாக்கிய சமூகத் தாக்கம் என்ன... ஒன்றுமே இல்லை. உண்மையில் ஆண்டுதோறும் இந்தச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கைதான் அதிகரித்ததே ஒழிய, குற்றங்கள் குறையவில்லை. அண்மையில் உத்தரப்பிரதேசம், நொய்டாவில் ஒரு 16 வயது சிறுமி நிர்பயாபோலவே ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். திரைச்சீலைகளால் மூடிய அந்தப் பேருந்து, சிறுமியோடு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ஊரெல்லாம் சுற்றி டெல்லிக்குப் போகிற வரை யாருக்கும் தெரியவில்லை. இங்கே இதுதான் நிலைமை.
சட்டம்-ஒழுங்கு நடவடிக்கையால் மட்டும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியாது என்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை ஆட்சியாளர்களும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, கடுமையான சட்டங்களால் ஆணாதிக்கம் அடர்ந்த இந்திய வீடுகள் மற்றும் சாதியமைப்புக்குள் நுழைய முடிவதில்லை. இரண்டாவது காரணம், குற்றவியல் மனப்பான்மை. `பிடிபட மாட்டோம், பிடிபட்டாலும் சாதி மற்றும் பண அதிகாரத்தால், சட்டத்தின் ஓட்டைகளின் வழியே தப்பித்து விடலாம்’ என்று குற்றவாளிகள் பெரிதும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்குக் காரணம், நமது நீதியமைப்பின் லட்சணம். பாலியல் குற்றங்களின் தண்டனை விகிதம் தேசிய, மாநில அளவில் சுமார் 25% மட்டுமே. ஆண்டுதோறும் குவியும் ஆயிரக்கணக்கான வழக்குகளின் பன்னெடுங்காலத் தேக்கம், குற்றம் இழைப்போருக்கு, ‘சட்டம்’ என ஒன்று இருப்பதையே மறக்கடித்துவிடுகிறது.
அண்மையில், த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர் தன் கட்சிக்காரர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரும், குற்றம்சாட்டப்பட்டவரும் சமரசம் செய்து கொள்வதை உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறது. ஆனாலும் சில தீர்ப்புகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சமரசங்களை அனுமதிக்கின்றன.
இந்தச் சமூகத்தின் ஆணாதிக்கப் பண்பாட்டை மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் எந்தச் செயல்திட்டமும் இல்லை. 2025, நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்க அரசு பெண்களுக்கெதிரான குற்றங்களை தேசியப் பேரிடராக அறிவித்தது. அந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் நூறு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின. 2025-ம் ஆண்டு 40,000 பெண்களுக்கெதிராகக் குற்றங்கள் நடந்தேறின. இதை எதிர்த்து நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடந்தன. ‘வுமன் ஃபார் சேஞ்ச்’ என்ற அமைப்பு, தரையில் படுக்கும் போராட்டத்தை (Lie Down Protest) ஒருங்கிணைத்ததில் நவம்பர் 21, 2025 அன்று அந்த நாட்டின் பெண்கள் தம் வீடுகளில், பணியிடங்களில், பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், சாலைகளில் என எங்கு இருக்கிறார்களோ அந்த இடத்தில் 15 நிமிடங்கள் முழுமையான அமைதியில் படுத்துப் போராட்டம் நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அரசு பெண்களுக்கெதிரான குற்றங்களை தேசியப் பேரிடராக அறிவித்ததோடு, அவற்றைத் தடுத்து நிறுத்த, ‘பாலின வன்முறை மற்றும் பெண் கொலைகளுக்கெதிரான தேசிய செயல்திட்டம்’ என்ற பெயரில் பத்தாண்டு வரைபடத்தை முன்மொழிந்தது. ஆணாதிக்க நெறிகள், பாலினப் பாகுபாடு மற்றும் பெண்கள் பல தலைமுறையாக எதிர்கொள்ளும் மனக்காயங்களை அகற்றுவதை இந்தத் திட்டம் முதன்மை நோக்கமாக முன்மொழிந்தது. சமூகக் குழுக்கள், ஊடகங்கள், பள்ளிகள் வழியே பிரசாரம் மற்றும் கல்வியின் வழியே இது சாத்தியப்படுத்தப்படும். சட்ட அமைப்பை வலுப்படுத்துவது, பெண்களுக்கான நீதி, பாதுகாப்புடன் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான ஆதரவு மற்றும் மீண்டெழுதலுக்கான செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறையைத் தடுத்து நிறுத்த நினைக்கும் ஓர் அரசு ஆணாதிக்கத்தை வேரறுத்து, பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வழிகளைத்தான் முதலில் ஆராயும். ஆனால் இந்தியாவில் கெடுவாய்ப்பாக எந்த அரசும் அதைச் செய்ததில்லை. நலத்திட்டங்களுக்குப் பெயர்போன தமிழகம் பெண்களுக்கெதிரான குற்றங்களில் வடமாநிலங்களோடு போட்டி போடுவது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. இலவசப் பேருந்து, மாதம்தோறும் 1,000 ரூபாய், தாலிக்குத் தங்கம், குழந்தை பிறந்தால் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் என, `பெண்கள் நலன்’ என்ற பெயரில் அரசியல் அதிரடி அறிவிப்புகளைக் கைவிட்டு நிபுணத்துவம்கொண்ட பெண்கள் அமைப்புகளைக் கலந்தாலோசித்து மக்களுக்குப் பாலின சமத்துவத்தைக் கற்றுத்தருவதற்கான வழிகளைத் தமிழக அரசு ஆராய வேண்டும். இல்லையெனில், பெண்கள் வாழத் தகுதியில்லாத மிக மோசமான மாநிலமாகத் தமிழ்நாடு ஆகிவிடும்!
