Lifestyle and human interest
‘`இனி நீயும் நானுந்தான் சாமி...’’ ஒற்றைத் தகப்பனின் நம்பிக்கை... தலைநிமிர்ந்த வாழ்க்கை!
‘`திருமண உறவு சரியா வராத நிலையில அதுலேருந்து விலகுறதும், அதுக்குப் பிறகான வாழ்க்கையைத் தொடர்றதும் அதன் போக்குல இயல்பா நடக்கும். பயப்படத் தேவை யில்லை.

ரத்த பந்தங்கள் தொடங்கி, சக மனிதர்கள் வரை எல்லோர் மீதும் நம்பிக்கை அற்றுப்போன சுயநலமான காலத்தில் வாழ்கிறோம். ஆனால், அந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஒற்றைத் தகப்பனாக மகனை வளர்த்து ஆளாக்கி, ஆகச் சிறந்த அப்பாவாக உயர்ந்து நிற்கிறார் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம். மகனுக்காக தன் விருப்பங்களை, கனவுகளைத் தியாகம் செய்தவர். இன்று தன் மகன் உயர்ந்த இடத்தில் நின்று தன்னைத் தாங்கும் அழகைக் கண்டு நெகிழும் இந்த எளிய மனிதரின் வாழ்க்கை அனுபவங்கள், மனித உறவுகள் மீதான நம்பிக்கையை மீட்டுத் தருகின்றன.
‘`சத்தியமங்கலம், புளியம்பட்டி பக்கத்துல உள்ள சின்ன கிராமத்துல வசிக்கிறோம். ஜவுளிக்கடையில வேலை பார்த்திட்டிருந்தேன். பெரியவங்க பார்த்துதான் எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. பத்து வருஷங்கள் நானும் என் மனைவியும் ஒண்ணா வாழ்ந்தோம். அப்புறம் சின்னதும் பெருசுமா எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல அதுக்கு மேல சேர்ந்து வாழறதுல அர்த்தமில்லைனு ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம். அப்போ எங்க ஒரே மகன் விஜய்க்கு எட்டு வயசு... பிரச்னைகளை ஆறப்போடுவோம்... கொஞ்ச நாள் கழிச்சு முடிவெடுப்போம்னு கூட அவங்க தரப்புல யோசிக்கலை. ‘பையனை நீங்களே வெச்சுக் கோங்க’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க...''
- உலகமறியா வயதில் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பை முழுமையாகச் சுமக்கத் தயாரான தருணம் யாருக்கும் வலித்திருக்கும். சுப்ரமணியமோ, அதை அளவு கடந்த அன்போடு ஏற்றிருக்கிறார்.
‘`என் மனைவி கடைசியா எங்களை விட்டுக் கிளம்பினபோது, பையன்கிட்ட, ‘சாமி... நான் கிளம்பறேன். பார்த்து இருந்துக்கோ’ன்னு சொல்லிட்டுப் போனாங்க. என் மகனுக்கு அப்ப அவங்க எங்கே போறாங்க, ஏன் அப்படிச் சொல்றாங்கன்னுகூட புரியாத வயசு. சந்தைக்குப் போறாங்க போலன்னு நினைச்சிட்டு அவன் பாட்டுக்கு மண்ல விளையாடிட்டிருந்தான். ரெண்டு நாளாகியும் அவங்க வரலைன்னதும் என்கிட்ட ‘அம்மா எங்கேப்பா’ன்னு கேட்டான். ‘இனி நீயும் நானுந்தான் சாமி...’னு சொன்னேன். ‘சரிப்பா’னு மட்டும் சொன்னான். அதுலேருந்து இன்னிக்கு வரைக்கும் அவன் அது பத்தி என்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்டதில்லை...’’
‘`குழந்தையை எப்படி வளர்க்கப் போறோம்ங் கிற கவலையெல்லாம் எனக்கு இல்லை. அக்கம் பக்கத்துல இருந்தவங்க, சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கனு எல்லாரும் எங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. எங்கம்மா சின்ன வயசுலயே தவறிட்டதால நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சமைக்கப் பழகிட்டேன். காலைக் கும் மதியத்துக்கும் சமைச்சு வெச்சிட்டு வேலைக்குக் கிளம்பிடுவேன். தினமும் 50 கிலோ மீட்டர் கடந்துபோய்தான் வேலை பார்த்துட்டு வருவேன். வீடு திரும்ப ராத்திரி பத்து மணியாயிடும். வீட்டுக்கு வந்ததும் மறுபடி நைட்டுக்கு சமைப்பேன். கொஞ்ச நாள்கள் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ’னு சிலர் சொன்னாங்க. எனக்கும்கூட அப்படியோர் எண்ணம் வந்தது உண்மைதான். அப்பதான் என் நண்பர் ஒருத்தர், ‘இன்னொரு கல்யாணமெல்லாம் வேணாம். இனி உன் பையனோட வாழ்க்கைக்காக யோசி... அவனுக்கு சேமிக்கிற வழியைப் பார்... அவனை ஆளாக்கிட்டா, நாளைக்கு அவன் உன்னை நல்லபடியா பார்த்துப்பான்’னு சொன்னார். அந்த நிமிஷமே அந்த எண்ணத்தை மாத்திக் கிட்டேன்.
எனக்கு மாசம் பத்தாயிரம்தான் வருமானம் வந்திட்டிருந்தது. ஆனா, அதையும் பார்த்துப் பார்த்துதான் செலவழிப்பேன். மகன் அரசுப் பள்ளியிலதான் படிச்சான். நல்ல மார்க்ஸ் எடுத்தான். பிடெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிக்க ஆசைப்பட்டான். சேர்த்து வெச்ச பணம், சீட்டுப் பணமெல்லாம் வெச்சு காலேஜ் ஃபீஸ் கட்டினேன். நல்லா படிச்சு இன்னிக்கு ஒரு கம்பெனியில நல்ல வேலையில இருக்கான். நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து வேலை பார்த்தே பழகினவன் நான். பையன் தலையெடுத்ததும் என்னை வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னான். எனக்கு சும்மா இருந்து பழக்க மில்லைங்கிறதால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துல ஊர்க்காரங் களோட சேர்ந்து வேலைக்குப் போயிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல ‘நீங்க உழைச்சது போதும், இனி வேலைக்குப் போக வேண்டாம்’னு சொல் லிட்டான். என்னை நல்லபடியா பார்த்துக்கறான். கஷ்டங்களை மட்டுமே பார்த்த எங்க வாழ்க்கை, இன்னிக்கு சந்தோ ஷங்களையும் பார்க்க ஆரம் பிச்சிருக்கு...’’ - நெகிழ்கிறார் சுப்ரமணியம்.
‘`அம்மா இல்லாத வாழ்க்கை மகனுக்கு எப்படி இருக்கும், அவனுக்குள்ள ஏக்கம் இருக்குமான்னெல்லாம் பல நாள் யோசிச்சிருக்கேன். ஒருநாள் என் மகன்கிட்ட அது பத்திக் கேட்டேன். ‘உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்ப்பா... நீங்க எல்லாருக்கும் நல்லது நினைக்கிறவர். அம்மாவாவும் இருந்து என்னை நீங்க நல்லா பார்த்துக்கறீங்க... நீங்க ஒரு முடிவு எடுத்திருக்கீங்கன்னா அது நிச்சயம் சரியாதான் இருக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு'ன்னு சொன்னான். அவன் என் மேல வெச்சிருக்குற நம்பிக்கைக்கு இணையா நான் அவன் மேல நம்பிக்கை வெச்சேன். கட்டுப்பாடு களோட வளர்க்காம, அவனை சுதந்திரமா வளர அனுமதிச்சேன். அவன் நினைச்சிருந்தா, கேள்வி கேட்கவோ, கண்காணிக்கவோ ஆளில்லைனு தவறான பழக்கங்களுக்குள்ள போயிருக்கலாம்... அப்படி எதுவும் செய்யலை. ‘அப்பா சந்திக்காத பிரச்னையா... வாழ்க்கையில இத்தனை கஷ்டங்கள் இருந்தபோதும் அவர் சிகரெட் பழக்கத்தையோ, குடிப்பழக்கத்தையோ பத்தி யோசிக்கலை. அப்படி இருக்கும்போது நான் எப்படி அதையெல்லாம் யோசிப்பேன்'னு அவன் நண்பர்கள்கிட்ட பகிர்ந்துகிட்ட தகவலும் என் காதுக்கு வந்தது. ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருந்த அந்த நம்பிக்கையும் அன்பும்தான் எங்களை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்கு...’’
- நம்பிக்கையே அன்பின் ஆதாரம் என நிரூபித்திருக்கிறார்கள் இருவரும். ஒற்றைப் பெற்றோராக வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராகும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுபவத் திலிருந்து பாடம் சொல்கிறார் சுப்ரமணியம்.
‘`திருமண உறவு சரியா வராத நிலையில அதுலேருந்து விலகுறதும், அதுக்குப் பிறகான வாழ்க்கையைத் தொடர்றதும் அதன் போக்குல இயல்பா நடக்கும். பயப்படத் தேவை யில்லை. ஆணோ, பெண்ணோ... தனக்குனு ஒரு வேலையை நிரந்தரமா வெச்சுக்கணும். சேமிப்பு ரொம்ப முக்கியம். நாம ஒழுக்கமா இருந்தாலே நம்ம பிள்ளைங்களும் ஒழுக்கமா வளர்ந்துடுவாங்க.
பிள்ளைங்களுக்கு நல்ல நட்பு வட்டம் இருக்கணும். நட்புக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். என் மகனுக்கு நல்ல நண்பர்கள் அமைஞ்சாங்க. அம்மா இல்லாத குறை தெரி யாம அவன் வளரவும் நல்லா படிக்கவும் அந்த நட்புதான் காரணம். பிள்ளைங்க படிக்கிற பள்ளிக் கூடத்தோட பெற்றோர் தொடர்புல இருக்கணும். அந்தச் சூழல் எப்படியிருக்கு, அன்றாட வாழ்க்கையில என்ன நடக்குதுனு பிள்ளைங்ககிட்ட நிறைய பேசணும். நேர்மை யாவும் நம்பிக்கையோடவும் பேசணும்... மற்ற எல்லாத்தையும் காலம் அழகா பார்த்துக்கும்...’’
