சிறுநீரக நோய்களை கண்டறிய ஏ.ஐ., கருவி உருவாக்கம்
சென்னை: சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, செயற்கை நுண்ணறிவு எனும், 'ஏஐ' அடிப்படையிலான கருவியை, சென்னை ஐ.ஐ.டி., - வேலுார் சி.எம்.சி., இணைந்து உருவாக்கி உள்ளன.
சென்னை ஐ.ஐ.டி., - வேலுார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சியாளர்கள், சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மதிப்பிடுவதற்கு, மருத்துவர்களுக்கு உதவிடும் வகையில், செயற்கை நுண்ணறிவு எனும் 'ஏஐ' அடிப்படையில் செயல்படும், மூன்று கருவிகளை உருவாக்கி உள்ளனர்.
முதலாவதாக, மருத்துவம் மற்றும் ஆய்வக தகவல்களை பயன்படுத்தி, நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தை கணிக்கும் தொழில்நுட்பத்தில் ஒரு கருவி உருவாக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, 'சிடி ஸ்கேன்' படங்களை தானாக பகுப்பாய்வு செய்து, அவற்றை இயல்பான, சிறுநீரகம்.
சிறுநீரக நீர்க்கட்டி, சிறுநீரகக் கல், சிறுநீரகக்கட்டி என, நான்கு வகையான ஆழ்நிலை கற்றல் கருவி; 'சிடி ஸ்கேன்' படங்களில் இருந்து, சிறுநீரகத்தின், '3டி' உருவத்தை மீண்டும் உருவாக்கி, கட்டியின் அளவையும், சிறுநீரகத்தில் கட்டி எத்தனை சதவீதம் பாதித்துள்ளது என்பதையும், மதிப்பீடும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., இயந்திர பொறியியல் துறையைச் சேர்ந்த, பேராசிரியர் ஜி.எல்.சாமுவேல், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மாணவி ஜெனிபர் டிலைட்டா ஆகியோர் தலைமையில், வேலுார் சி.எம்.சி., சிறுநீரகவி யல் துறையைச் சேர்ந்த, பேராசிரியர் சந்தோஷ் வர்கீசுடன் இணைந்து, இந்த கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.