தரமற்ற உதிரிப்பாகங்களால் தள்ளாடும் போக்குவரத்துக் கழகம்

மதுரை: தமிழக அரசு பஸ்களின் தரமற்ற உதிரிப்பாகங்களால், பஸ்களின் பராமரிப்பு பாதிக்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்தாண்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு விரைவு பஸ் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளாகி, 7 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் அதன்பின் போக்குவரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், 6 மாதங்களில் நுாற்றுக்கணக்கான அரசு பஸ்கள் டயர் வெடித்து விபத்தில் சிக்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன் குமுளி- நாகர்கோவில் அரசு பஸ் முன்பக்க டயர் வெடித்து, தனியாக ரோட்டில் ஓடியது; டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களில் தினமும் 2.03 கோடி பேர் பயணிக்கின்றனர். பஸ்களில் தொடரும் விபத்துக்களால் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தொடர் விபத்துக்களால் மக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் மேல் நம்பிக்கை குறைந்து விட்டது. உதிரிப்பாகங்களின் தரத்தை உறுதி செய்யாமல் கொள்முதல் செய்வதால், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
தற்போது இருப்பில் உள்ள உதிரிப்பாகங்களை முழுமையாக ஆய்வு செய்து, தரமற்றவற்றை அகற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் உதிரிப்பாக கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். கொள்முதல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யாமல், தரத்தை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு முறையை வலுப்படுத்த வேண்டும் என்றனர்.