ஆழியாறு அணையில் குழுவினர் ஆய்வு பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை
ஆனைமலை: ஆழியாறு அணையில், பாதுகாப்பு மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழக நீர்வளத்துறை சார்பில், மாநில அளவில் அமைக்கப்பட்ட அணை பாதுகாப்பு அமைப்பின் கீழ், அணைகளின் கட்டமைப்பு, பாதுகாப்பு, நீரியல் பாதுகாப்பு, இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களின் நிலை, அணையின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய நீர்வள ஆணைய தலைவர் பஜாஜ் தலைமையில் புவி தொழில்நுட்ப வல்லுநர், ஐ.ஐ.எஸ்.சி., கட்டட பொறியியல் துறை இணை பேராசிரியர் வல்சா கோலந்தையார், தமிழக நீர்வளத்துறை ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் நீரியல் நிபுணர் பத்மநாபன், வடிவமைப்பு நிபுணர் செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர், ஆழியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
அணையின் கால்வாய் மதகுகள், ஆற்று மதகுகள், உபரி நீர் வெளியேற்றும் கட்டமைப்பு, ஸ்பில்வே மதகுகள், மதகுகளின் இயக்க அமைப்புகள், மண் கரையின் நிலைத்தன்மை குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர்.
அணை பாதுகாப்பினை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய புதிய பணிகள், பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் குறித்து குழுவினர் ஆய்வு செய்து, அவற்றை உரிய முறையில் மேற்கொள்வது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர்.
பி.ஏ.பி., திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், கோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.