Politics
தாராபுரம் இடைத்தேர்தல்: கட்சி விளம்பரம் அகற்ற உத்தரவு
திருப்பூர்: ‘‘தனியார் கட்டடங்களில் அனுமதியின்றி வைத்துள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை, தேர்தல் அறிவிப்பு வெளியான, 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும்,’’ என, மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரான, கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சதீஷ் முன்னிலை வகித்தார். தேர்தல் தாசில்தார் தேவராஜ் வரவேற்றார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது:
அரசு கட்டடம் மற்றும் சொத்துக்களில், தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது. தனியார் கட்டடங்களில் அனுமதியின்றி வைத்துள்ள அரசியல் விளம்பரங்களை, தேர்தல் அறிவிப்பு வெளியான, 72 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு, அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணம் இருக்க கூடாது; தனிப்பட்ட பயணம் இருக்கலாம். வேறு மாவட்டத்துக்கு செல்லும் அமைச்சர்கள் தேர்தல் நடக்கும் தொகுதி வழியாக செல்ல நேரிட்டாலம், அரசியல் பணியில் ஈடுபடக்கூடாது.
பரஸ்பரம் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை விமர்சிப்பது அவர்கள் கொள்கைகள், திட்டங்கள், கடந்தகால செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசக்கூடாது.
பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து, போலீசுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அனுமதி பெறவேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டம் தொடர்பான உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். ‘ஸ்பீக்கர்’ பயன்படுத்த முன் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்களில் அமைதியை குலைக்கும் அல்லது குழப்பம் ஏற்படுத்தும் நபர்களை சமாளிக்க தேவையான போது காவல் துறையினரின் உதவியை பெற வேண்டும். பேரணி நடத்த முன் அனுமதி பெற வேண்டும்.
‘பூத் சிலிப்’பில், கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் அல்லது கட்சி பெயர் இருக்கக்கூடாது. பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவு நாளில், வாகனங்கள் இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தேர்தல் நடத்தை தொடர்பான புகார்களை, தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும்அலுவலர், மண்டல தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். பிரசாரம் முடிந்ததும், தொகுதியில் சேராத நபர்கள், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லது அரசின் சாதனைக விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் எவ்வித சலுகையும் வழங்க கூடாது. ஜாதி அல்லது சமுதாய உணர்வுகளை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக்கூடாது. கோவில், மசூதி, சர்ச் மற்றும் பிற வழிபாட்டுதலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் பிரசாரம் செய்யக்கூடாது.
இவ்வாறு, தேர்தல் அலுவலர் பேசினார்.
தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு, அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பயணம் இருக்க கூடாது. வேறு மாவட்டத்துக்கு செல்லும் அமைச்சர்கள் தேர்தல் நடக்கும் தொகுதி வழியாக செல்ல நேரிட்டாலம், அரசியல் பணியில் ஈடுபடக்கூடாது.