மேகமலை நீர் தேக்கங்களில் கூடுதல் தண்ணீர் தேக்குவது அவசியம்: குடிநீர், பாசனத்திற்கு பயன்படும் என கோரிக்கை

தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின் நிலையத்தில் 168 மெகா வாட், வண்ணாத்திபாறை வனப்பகுதியில் உள்ள சுருளியாறு நீர் மின் நிலையத்தில் 35 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர முல்லைப்பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ நீர் மின் நிலையங்கள் மூலம் 12 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரை வைத்து பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப் படுகிறது.
இரவங்கலாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை வைத்து சுருளியாறு மின் நிலையத்தில் மின் சாரம் உற்பத்தியாகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியாறு மின் நிலையத்தில் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு 168 மெகாவாட் உற்பத்தியாகிறது. ஆனால் சுருளியாறு மின் நிலையம் துவக்கப்பட்டு 48 ஆண்டுகளை கடந்தும் மின் உற்பத்தி திறன் இதுவரை அதிகரிக்கப்படவில்லை.
ஹைவேவிஸ் அணை கடல் மட்டத்தில் இருந்து 1505 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இதில் 10 முதல் 15 மீட்டர் ( 32 அடி ) வரை தண்ணீர் தேக்கலாம். இரவங்கலாறு அணையில் 7 மீட்டர் ( 23.96 அடி ) வரை தேக்கலாம். மணலாறு அணையில் 22 மீட்டர் ( 72 அடி ) வரை தண்ணீர் தேக்கலாம்.
இந்த அணைகள் இயற்கையாக அமைந்துள்ளன. பெரிய அளவில் கட்டுமானங்கள் கிடையாது. இந்த அணைகளில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்படுவதில்லை.
இதனால் பருவமழை காலத்தில் ஆயிரக்கணக்கான கன அடி தண்ணீர், அணைகளில் நிரப்ப முடியாமல் வெளியேற்றப்படுகிறது. அவை வீணாக செல்கின்றன. இந்த அணைகளில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவை உயர்த்தினால் அழுத்தம் அதிகரித்து சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க இயலும்.
மேலும் சின்னமனுாருக்கு கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர், பாசன வசதிக்கு இந்த கூடுதல் தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும்.
மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய நீர் தேக்கங்களை துார்வாரி கூடுதல் தண்ணீர் தேக்க கட்டுமான பணிகளை மின்வாரியத்தினர் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.