Health
ரோட்டின் ஓரம் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ; பிளாஸ்டிக் கழிவுகளால் உடல் நலக்கேடு அதிகம்

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ரோட்டின் ஓரம் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் உடல் நலக்கேடு ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் நகரம், கிராமப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு பலவித வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் போகிற போக்கில் ரோட்டின் ஓரம் குப்பையை வீசி செல்வது தொடர்கதையாக உள்ளது.
நள்ளிரவு நேரத்தில் வெளியிடங்களில் இருந்து வந்து குப்பைக்கழிவுகளை கொட்டி செல்வதும் தொடர்கிறது. தற்போது குப்பைக்கழிவுகளுடன் காய்கறி கழிவுகள், இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. சாப்பிட்ட இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவு கொட்டப்படுகிறது.
இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதுடன் சில நாட்களில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையில் வீசப்படும் உணவுகளை சாப்படும் தெருநாய்கள், பன்றிகள், கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
வீசப்படுவது மக்கும் மற்றும் மக்காத குப்பையாக பிரிக்கப்படாமல் இருப்பதால் பூமிக்கு மாசு ஏற்படுகிறது. பல இடங்களில் இந்த குப்பைக்கழிவுகள் அப்படியே தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் உண்டாகும் நச்சுப்புகை சுற்றுச்சூழலை பாதிக்கிறது.
மேலும் மக்களுக்கு சுவாசக்கோளாறு, கண் மற்றும் தோல் எரிச்சல் போன்ற உடல் நலக்கேடுகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கில் இருந்து வெளிவரும் வாயுக்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவில் ஆபத்தானவையாக உள்ளன.
மாவட்டத்தில் பல இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதில்லை. ரோடுகளில் வீசப்படும் குப்பை குவியல் குவியலாக இருக்கின்றன. இதனால் மழை பெய்யும் போது மழைநீர் வடிகாலுக்கு செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக துாய்மையாக இருக்க வேண்டிய நான்கு வழிச்சாலை அசுத்தம் நிறைந்ததாக மாறி விடுகிறது. ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டில் அனைத்து விதமான குப்பை கழிவுகளையும் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது.
குப்பையில் மொய்க்கும் ஈக்கள், பூச்சிகள், கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் மூலம் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. நீர்நிலை பகுதிகளில் குப்பையை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் நிறம் மாறவும் வாய்ப்பு உள்ளது.
எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க ரோடு, நீர்நிலை பகுதிகளில் குப்பை கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். மீறி கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.