Religion
அழகிய பூபதி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சிறுகுடி பெருங்கருணை கிராமத்தில் பூரண புஷ்கலை சமேத அழகிய பூபதி அய்யனார், அக்னி மாடசாமி, செல்வகணபதி உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மங்கள இசை, கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சுதர்சன ஹோமம், தன பூஜை, முதல் கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்பாடுக்கு பிறகு கும்பநீர் ஊற்றப்பட்டது. பூரண புஷ்கலை சமேத அழகிய பூபதி அய்யனார், அக்னி மாடசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாட்டை ஓய்வு தலைமைஆசிரியர் நவநீதகிருஷ்ணன், ஓய்வு தமிழாசிரியர் புஷ்பம் உட்பட விழாக் குழுவினர் செய்தனர்.முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.