Politics
2013 நக்சல் தாக்குதல் பா.ஜ., ராஜீவ் சந்திரசேகர் – காங்., சிதம்பரம் இடையே காரசார வார்த்தை போர்
திருவனந்தபுரம், செப். 10– சத்தீஸ்கரில் கடந்த 2013ல் நடந்த நக்சல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கேரள பா.ஜ., தலைவர்
சத்தீஸ்கரில் கடந்த 2013ல் நடந்த நக்சல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கேரள பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் காங்., மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு இடையே காரசார வார்த்தை போர் வெடித்துள்ளது.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில், கடந்த 2013, மே 25 அன்று காங்கிரஸ் நிர்வாகிகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நக்சல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அப்போதைய காங்கிரஸ் மாநில தலைவர் நந்தகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில் இவ்வழக்கில் 10 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் தன்னை அறிவுசார் நக்சல் என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, கேரள மாநில பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சந்திரசேகர், ‘கடந்த 2013ல் காங்., தலைவர்கள் கொல்லபட்டதற்கு, அப்போதைய காங்கிரஸ் அரசு நக்சல் பிரச்னையை சரியாக கையாளாததே காரணம். ஆனால், தற்போதோ 10 நக்சல்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த சிதம்பரம், ‘ராஜீவ் சந்திரசேகருக்கு மறதி ஏற்பட்டுவிட்டது. நான் 2012, ஆகஸ்டிலேயே மத்திய உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டேன். சத்தீஸ்கரில் 2013, மே மாதத்தில் தான் தாக்குதல் நடந்தது’ என குறிப்பிட்டார்.
சிதம்பரத்திற்கு மீண்டும் பதிலடி கொடுத்து ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:
சத்தீஸ்கரில் காங்., தலைவர்கள் மீது தாக்குதல் நடந்த நாளில், மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகிக்காவிட்டாலும், அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகள் வரை அந்த பொறுப்பை வகித்து இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பொறுப்பு வகித்த காலத்திலேயே நக்சல்கள் வளர்ந்து, ஆயுதங்களை குவித்தனர். அவர் பதவி விலகிய மறுநாளே நக்சல்கள் திடீரென வளர்ந்துவிடவில்லை. அறிவுசார் நக்சல்கள் என்ற சித்தாந்த போக்கின் காரணமாகவே சொந்த கட்சி தலைவர்கள் உயிரிழக்க நேரிட்டுள்ளது. சிதம்பரத்தின் இந்த விளக்கம், தாக்குதலில் கொல்லப்பட்ட காங்., தலைவர்களின் நினைவுகளை கொச்சைப்படுத்துவது போல இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அறிவுசார் நக்சல்களை இனம் கண்டு, அவர்களிடம் இருந்து நாட்டு மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். பிரதமரின் இந்த கருத்தை விமர்சித்த சிதம்பரம், ‘நான் ஒரு அறிவுசார் நக்சல் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.