Politics
முதல்வர் விஜயின் வாகனத்தை மறிக்க முயன்றவர்களால் பரபரப்பு
சென்னை: முதல்வர் விஜய், நேற்று சட்டசபைக்கு வரும்போது, தலைமை செயலகம் அருகே, அவரது வாகன அணிவகுப்பை சிலர் மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன், 26. இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
கடந்த மார்ச் 8ல், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இறந்தார். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் தாக்கியதால் தான் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட, 16 போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி, மானாமதுரையில் அவரது குடும்பத்தினர், 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.
இவ்வழக்கில், கடந்த ஜூன் 18ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட எலும்பு முறிவு, காயங்களால் ஆகாஷ் டெலிசன் இறந்ததாக கூறப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ., குகன் மற்றும் போலீசார் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகியோர் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், 'நாங்கள், 16 போலீசார் மீது புகார் அளித்துள்ளோம்; ஆறு பேர் மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்ட நிலையில், கைது செய்யப்படாமல் உள்ளனர்.
'அனைவரையும் வழக்கில் சேர்த்து உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, ஆகாஷ் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு அருகே சென்ற போது, அவரது காருடன் வரும் பாதுகாப்பு வாகன அணிவகுப்பை, ஆகாஷ் பெற்றோர், உறவினர்கள் மறித்து, 'நீதி வேண்டும்' என கோஷம் போட்டனர்; மறியல் நடத்தவும் முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதை தொடர்ந்து, முதல்வர் விஜயின் கார் சிறிது நேரம் அங்கு நிறுத்தப்பட்டு, பின் புறப்பட்டு சென்றது.
