பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு
வானுார்: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதியில், புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிர்வாக அறவங்காவலர் கோதண்டராமன் கூறியதாவது:
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமி, புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், அதிகாலை விஸ்வரூப சேவைக்கு பின்பு, காலை 5;00 மணி முதல் 7;30 மணி வரை திருப்பதி கோவிலை போன்று, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது.
இந்த சுப்ரபாதம், தோமாலை மற்றும் அர்ச்சனை சேவைகள், புரட்டாசி மாதம் மட்டுமின்றி வரும் அனைத்து மாதங்களிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நடக்கும். தொடர்ந்து காலை 7;45 மணி முதல் பக்தர்கள், சர்வ தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
மேலும், புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்கார பந்தலில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசிக்கும், பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும், ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை, 11;00 மணி முதல் 1;00 மணி வரை சிறப்பு அன்னதானமும், வழங்கப்படும்.
ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு நடக்கவுள்ள சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்ற நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள், பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் அலுவலகத்தை அனுகி முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா டிரஸ்டியினர் செய்துள்ளனர்.