கொசஸ்தலையில் புதிய மேம்பாலம் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
பள்ளிப்பட்டு, செப். 9-– கொசஸ்தலை ஆற்றில் இடிந்து கிடக்கும் தரைப்பாலத்திற்கு மாற்றாக, புதிய மேம்பாலம்
கொசஸ்தலை ஆற்றில் இடிந்து கிடக்கும் தரைப்பாலத்திற்கு மாற்றாக, புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, நெடியம் வழியாக பாய்ந்து சென்று, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இதில், சொரக்காய்பேட்டை, நெடியம் இடையே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம், கடந்த 10 ஆண்டுகளில், ஐந்து முறை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக, சொரக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை சுற்றுப்பகுதியை சேர்ந்த நெசவாளர்கள், ஆந்திர மாநிலம், நகரிக்கு சென்று வருகின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் இடிந்து கிடப்பதால், நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிப்பட்டு வழியாக மாற்றுப்பாதையில், 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த தரைப்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, சென்னை கோட்ட பொறியாளர் சீனிவாசன், திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று நெடியம், சொரக்காய்பேட்டை இடையே கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது குறித்து, கள ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்த திட்ட வரைவு தயார் செய்து, அரசு ஒப்புதல் பெற்றதும், மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கும் என, ஆய்வுக்கு பின், நெடுஞ்சாலை துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.