Arts, culture, entertainment and media
மேகமலை மக்கள் வெளியேற்றம் கைவிட கோரி நடைபயணம்

கடமலைக்குண்டு: ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் வருஷநாடு முதல் கடமலைக்குண்டு வரை நடைபயணம் மேற்கொண்டனர்.
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 98 மலைக்கிராம மக்களை புலிகள் காப்பகம் என்ற பெயரில் வன ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பை கைவிடக்கோரியும், 2006 வன உரிமைச் சட்டத்தின் படி அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், பொது மக்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 15 கி.மீ., தூரம் நடை பயணம் மேற்கொண்டனர். நடைபயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் எம்.பி., சுப்புராயன் துவக்கி வைத்தார். வருஷநாடு, வைகை நகர், தர்மராஜபுரம், தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை வழியாக கடமலைக்குண்டுவில் நடைபயணம் நிறைவடைந்தது.
பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.