Politics
பிரிக்ஸ் மாநாட்டுக்கு வரும் சீன அதிபர் பிரதமர் மோடியை சந்திக்கிறார்
புதுடில்லி: 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்காக டில்லி வரும் சீன அதிபர் ஷீ ஜின்பிங், பிரதமர் மோடியை செப்., 12 அன்று சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா -- சீனா இடையேயான இரு தரப்பு உறவில் பரஸ்பர நம்பிக்கை குறைவாகவே உள்ளது. 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பின், இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட பதற்றம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா தலைமையில் நடக்கும், 'பிரிக்ஸ்' மாநாடு இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன், 'பிரிக்' என்ற பெயரில் இந்த அமைப்பு உருவானது. 2011ல் இந்த அமைப்பில் தென் ஆப்ரிக்கா இணைந்ததும், 'பிரிக்ஸ்' என பெயர் மாற்றப்பட்டது.
இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு, புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் மாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
சீன அதிபர் ஜின்பிங் டில்லி வருவது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை நாளைய தினம் டில்லியில் அவர் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.