Weather
சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலம் துவங்கியது: முன்னெச்சரிக்கை பணி எப்போது

இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக மழைக்காலத்திற்கான அறிகுறியாக மழை பெய்து வருவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், ஈரப்பதத்தை பயன்படுத்தி பல்வேறு பயிர்களுக்கான விதைப்பு மற்றும் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், கிராமங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் மழைநீர் தேங்குவதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், சாலைகளில் சேறும் சகதியுமாக மாறுதல், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலைகளில் வழிந் தோடுதல் போன்ற பிரச்னை ஏற்படக்கூடும்.
மேலும், தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட கொசு மூலம் பரவும் நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. குடிநீர் குழாய்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாசு ஏற் படுவதால் குடிநீர் மூலம் பரவும் நோய்களும் உருவாக வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலம் துவங்குவதற்கு முன்பும், மழை பெய்துகொண்டிருக்கும் காலத்திலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் கால்வாய்கள், வடிகால்கள் மற்றும் சிறுபாலங்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவு மழைநீர் வடிகால்களில் அடைத்துக் கொள்ளாத வகையில் அவற்றை உடனுக்குடன் அகற்றுவதுடன், நீண்ட நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி கொசு ஒழிப்பு நடவடிக்கை களையும் தீவிரப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் கொசு மருந்து தெளித்தல், புகைமருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்,
சுகாதாரத்துறை சார்பில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி தென்படும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், குடிநீர்ஆதாரங்களில் குளோரினேசன் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பயன் படுத்துதல், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், கொசுக்கள் உற்பத்தி யாகும் இடங்களை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மழைக்கால பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம் மற்றும் வேளாண்மைத்துறையினர் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.