சித்திரைச்சாவடி தடுப்பணையை துார்வார... இதுவே சரியான நேரம்!:பாதாளத்துக்கு செல்கிறது நிலத்தடி நீர்மட்டம்

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், வறண்டு கிடக்கும் சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வாரி, நீரை சேமிக்க வேண்டும்.
கோவையின் ஜீவநதியான நொய்யல் ஆறு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உருவாகி, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக கரூரில் காவிரியுடன் கலக்கிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விவசாயம் பிரதான தொழில். நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையாக, சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது.இந்த தடுப்பணையில் இருந்து, நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்காலான கீழ்ச்சித்திரைச்சாவடி வாய்க்கால் துவங்கி, 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
வழக்கமாக, தென்மேற்கு பருவ மழை காலமான, ஜூன் முதல் செப். வரை, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்தாண்டு, தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், நொய்யல் ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, பாசன வசதிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வாரி, 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால், நீரை தேக்கி வைக்கும் தடுப்பு சுவரை விட உயரமாக மணல் திட்டுகள் உள்ளன.
அதிலும், 10 அடி உயரத்திற்கு நாணல் வளர்ந்து, நொய்யல் ஆறு இருந்த இடமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டது.
பரந்து விரிந்து காணப்பட்ட நொய்யல் ஆற்றில், நீர் செல்லும் வழித்தடம் குறுகி விட்டது. சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வாருவதே தீர்வு என்கின்றனர் விவசாயிகள்.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அதிகாரி கூறுகையில்,சித்திரைச்சாவடி தடுப்பணையை, தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தூர்வார திட்டமிட்டு வருகிறோம்,என்றார்.
திட்டமிடுங்கள்...ஆனால் சீக்கிரம் செயல்படுத்துங்கள்!