குருவாயூரில் பக்தர்களுக்கான வசதிகள் என்ன? 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருவனந்தபுரம், செப்.11– கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் பக்தர்களுக்கான
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பிரசாத தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு முழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், கொச்சியை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலரான கோவிந்தன் நம்பூதிரி, ‘பக்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்’ எனக்கோரி, தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, திருச்சூர் மாவட்ட கலெக்டர் நான்கு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் விபரம்:
பிரசாத உணவுகளின் தரத்தை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழுவின் செயல்பாடுகள், அதன் உறுப்பினர்கள் விபரம், ஆய்வு நடத்தப்படும் காலஇடைவெளி ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஓராண்டில் பிரசாதங்கள் சமைக்கப்படும் சமையல் அறை மற்றும் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உணவு பாதுகாப்பு ஆய்வுகளின் தரவுகளை சேகரிக்க வேண்டும்.
முதியோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரத்யேக வசதிகள்; குறிப்பாக அவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், வரிசை மேலாண்மை முறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தேவஸ்வம் ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். நேர்த்தக்கடன்களுக்கான கட்டணங்கள், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை அளவிலேயே வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.