Crime, law and justice
குழந்தைகளை கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் சிக்கினார்

திருப்பத்துார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளை, கிணற்றில் வீசி கொலை செய்த கர்ப்பிணி தாய் சிவகாமி, 23, தன் கள்ளக்காதலன் ராஜா, 34, என்பவருடன் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்துாரில், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., விவசாய கிணற்றில், ஆக., 30ம் தேதி, இரு குழந்தைகளின் சடலம் மிதந்தது. ஆலங்காயம் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில், வெளிச்சானுார் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியான சேட்டு, 30, சிவகாமி, 23, ஆகியோரின் குழந்தைகள் பிரேம்குமார், 5, பிரதாப், 2, என, தெரிந்தது. செம்மர கடத்தல் வழக்கில், சேட்டு சிறையில் உள்ளார்.
இதனால் குழந்தைகளுடன் தனியாக இருந்த சிவகாமிக்கு, ஜமுனாமரத்துார் அடுத்த அத்திப்பட்டை சேர்ந்த டிரைவர் ராஜாவுடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதில், மூன்று மாதம் கர்ப்பமானார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளையும், ஆக., 27ம் தேதி கள்ளக்காதலன் ராஜாவுடன் சேர்ந்து அழைத்து சென்று, பெத்துாரிலுள்ள விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
ஆலங்காயம் போலீசார் சிவகாமி, ராஜாவை, நேற்று முன்தினம் கைது செய்தனர். ராஜாவுக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
