பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை வரையறுக்க வேண்டும் :அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவுரை
சென்னை: ''பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை வரையறுக்க வேண்டும்,'' என, வனத்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தை, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் நேற்று, நேரில் ஆய்வு செய்தார். படகில் பயணம் செய்து, ஏரி, தீவுகள், பறவைகளின் வாழ்விடங்கள் மற்றும் ஆற்றுமுகத்துவார பகுதியை பார்வையிட்டார். மேலும், ஏரியின் நீர்வரத்து மற்றும் உவர்ப்புத்தன்மை பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, அதிகாரிகளிடம் அமைச்சர் கூறியதாவது:
நீர்நிலையின் சூழலியல் நலனைப் பாதுகாக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீவுப் பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை, அறிவியல் முறையில், உரிய திட்டமிடலுடன் அகற்ற வேண்டும்.
சரணாலயத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். பணியாளர் தேவைகளை உரிய முறையில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணாலயத்தின் எல்லைகளை, நிலத்தில் தெளிவாக வரையறுத்து உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு தேவையான, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், புலிக்காட் பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.