Politics
“டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவி... ரூ.1 கோடி!” பேராசிரியர்களைக் குறிவைத்து நடந்த சதுரங்க வேட்டை!

நாளாக நாளாக எந்தவொரு ஆர்டரும் வரவில்லை. கேட்கும்போதெல் லாம், `பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள், ஆர்டர் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்’ என்று கூறுவார்.
“அரசு வேலை வாங்கித்தருவதாகப் பண மோசடி செய்யும் சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலேயே போஸ்ட்டிங் போடுகிறேன்’’ என்று பலரிடமும் பல கோடிகளை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஷயம் இதுதான். ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், `அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) உறுப்பினர் ஆக்குகிறேன், அதிக வருமானமும், அரசு மரியாதையும் கிடைக்கும்’ என்று பல மாவட்டங்களில் கல்லூரி ஆசிரியர்களிடம் ஆசைகளைத் தூண்டிவிட்டு, கோடிகளில் மோசடி செய்ததாக முதற்கட்டமாக நாமக்கல், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
பணம் கொடுத்து ஏமாந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியை ஒருவர் பெயர், அடையாளம் மறைத்துப் பேசுகையில், “கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன். ராணுவத்தில் பணியாற்றிய என் கணவர் விருப்ப ஓய்வுபெற்று விவசாயம் செய்து வருகிறார். 2021-ல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருந்தபோது வழிகாட்டியாக (Guide) வந்த ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ்குமார், என் கணவருடனும் குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகினார். ‘எனக்கு ஆட்சியாளர்களையும், அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் நன்கு தெரியும். அவர்கள் மூலம் ஏராளமானவர் களுக்கு அரசுப் பணி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்’ என்று கூறினார்.
‘படித்த படிப்புக்கு முறையான வழியில் வேலை கிடைத்தால் போதும்’ என்று, நானும் என் கணவரும் மறுத்துவிட்டோம். ஆனாலும் விடாமல் தொடர்புகொண்டவர், ‘தற்போது டி.என்.பி.எஸ்.சி-யில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன, உறுப்பினர் பதவியை வாங்கிக்கொடுக்கிறேன்’ என்று தொடர்ந்து மூளைச்சலவை செய்ததால் ஒருகட்டத்தில் சரி என்று ஒப்புக்கொண்டோம். ‘அதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் செலவாகும். என் மாணவி என்பதால் ஒரு கோடியில் முடித்துத் தருகிறேன், மூன்று மாதங்களில் வேலைக்கான உத்தரவு வந்துவிடும்’ என்று கூறியதைத் தொடர்ந்து என் கணவரின் செட்டில்மென்ட் பணத்துடன், நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் அவரிடம் ரொக்கமாகவும், அவருடைய பிள்ளைகளின் வங்கிக் கணக்கு, ஜிபே வழியாகவும் மொத்தம் எழுபது லட்சம் ரூபாய் கொடுத்தோம்.
ஆனால், நாளாக நாளாக எந்தவொரு ஆர்டரும் வரவில்லை. கேட்கும்போதெல் லாம், `பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள், ஆர்டர் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும்’ என்று கூறுவார். இப்படியே நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். 28.06.2025 அன்று, `அந்தப் பதவியே வேண்டாம். பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்’ என்று அவர் வீட்டுக்குச் சென்று கேட்டதற்கு, சுரேஷ்குமாரும் அவர் குடும்பத்தினரும் எங்களைக் கடுமையாகத் திட்டியதோடு, `இனி பணம் கேட்டு வந்தால் ஆட்களைவைத்துக் கொலைசெய்து விடுவோம்’ என்று மிரட்டினார்கள். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எஸ்.பி முதல் முதலமைச்சர் வரை புகாரனுப்பினோம். புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இப்போதுதான் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், எப்போது எங்கள் பணம் கிடைக்கும் என்று தெரியவில்லை” என்றார்.
இதேபோல் நாமக்கல் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் மாணிக்கவாசகன் என்பவரிடமும் அவர் மனைவிக்கு டி.என்.பி.எஸ்.சி-யில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாகத் தூண்டில் போட்டு 2 கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றியிருக்கிறார் சுரேஷ்குமார். அவர் கொடுத்த புகாரில் கடந்த 20-ம் தேதி சுரேஷ்குமாரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைதுசெய்தது. அதோடு, கூட்டாளியான சென்னையைச் சேர்ந்த வெங்கட் என்பவரையும் தேடிவருகிறது.
நாமக்கல், தருமபுரி மட்டுமின்றி திருச்செங்கோடு, கரூர், சேலம், ஈரோடு, சென்னை எனப் பல ஊர்களிலும் இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி, பல கோடிகளை மோசடி செய்திருக்கிறார் சுரேஷ்குமார். தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சுரேஷ்குமார், அவர் மனைவி, சகோதரி, பெற்றோர் என ஐந்து பேர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, “வழக்கு பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். இந்த மோசடி குறித்து விரிவாகப் பிறகு தெரிவிக்கிறோம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தை அறிந்த சிலரிடம் பேசியபோது, “பல ஆண்டுகளுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி-யில் உறுப்பினர்களாக இருந்த சிலர் தங்களை கவனித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் செயல் பட்டனர். பல குரூப் தேர்வுகளில் நடந்த கோல் மால்கள் நீதிமன்றம் மூலம் அம்பலமானது. ஆனால், தற்போதைய சூழலில் தேர்வாணைய உறுப்பினர் பதவி என்பது வெறும் கௌரவப் பதவிதான். எந்த முறைகேடும் செய்து பணம் சம்பாதிக்க முடியாது. அரசியல் நிலைப்பாடு கடந்து நல்ல நோக்கம் உள்ளவர்களை நியமித்ததன் விளைவால் தேர்வாணையத்தில் பல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
அப்படியான சூழலில் தேர்வாணைய உறுப்பினர் பதவி கிடைத்தால் கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. சில தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றிய சுரேஷ்குமார் 5 நிமிடம் ஒருவரி டம் பேசினால், அவருடைய பேச்சைக் கேட்பவர் தன் பாக்கெட்டில் உள்ளதை எடுத்துக் கொடுத்துவிடும் அளவுக்குச் சாதுர்யம் உள்ளவர். இவருக்குக் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் செல்வாக்கு இருந்தது.
அதேநேரம், குறுக்குவழியில் பதவியைப் பெற நினைத்த ஆசிரியர்கள் மீதும் தவறு இருக்கிறது. சுரேஷ்குமார் மோசடி செய்த பணத்தின் மூலம் ஈரோடு, சேலத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்ததாகச் சொல்கிறார்கள். இதைத் தற்போதைய அரசு அலட்சியம் செய்யாமல் சுரேஷ்குமாரின் பின்னால் உள்ளவர்களையும், இன்னும் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்றனர்.
