Sport
"தொடரும் முன்னணி வீரர்களின் காயம்... பிசிசிஐ அதிரடி முடிவு!"

பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தொடர்ச்சியாக இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, சர்வதேசப் போட்டிகளுக்கு இடையே போதிய ஓய்வு இடைவெளியை உருவாக்கும் நோக்கில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பி. சாய் சுதர்சன் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்கள் தீவிரமாக நடைபெறும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு உடனடியாகச் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதே இந்த காயங்களுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் 2027-31 ஆம் ஆண்டுகளுக்கான சர்வதேச எதிர்காலப் பயணத் திட்டம் (FTP) குறித்து விவாதிப்பதற்காக, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ள சிறப்புப் மாநாட்டிற்கு பிசிசிஐ தனது செயல்பாட்டுக் குழுவை (Operations team) அனுப்பவுள்ளது. இதில் பிற நாடுகளின் கிரிக்கெட் வாரியக் குழுக்களும், டாப் 8 இணை உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
தேசிய சிறப்பு மையத்தின் (CoE) தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மன், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன்கள் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா இது குறித்து உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன், வீரர்கள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளப் பயிற்சிப் போட்டிகளும், தொடர்களுக்கு இடையே முறையான ஓய்வும் கிடைக்குமாறு அட்டவணையை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இருதரப்புத் தொடர்களின் (Bilateral series) மீதான சுவாரஸ்யம் குறைந்து வருவதால், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் காலங்களில் மீண்டும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர்களை அதிக அளவில் நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
