Crime, law and justice
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் பதிவுக்கு தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: 'திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அறப்பணி செய்ய ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, எவ்வித ஆவணத்தையும் பதிவு செய்யக்கூடாது என பிறப்பித்த இடைக்கால தடை தொடரும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், நெடுங்குளம் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'திருச்சி, ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில், 21 ஏக்கர் 6 சென்ட் நிலம் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது.
இது, ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. சிலர் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தினை அபகரிக்க முயற்சிக்கின்றனர்' என, குறிப்பிட்டார்.
செப்., 3ல் இரு நீதிப திக ள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'இவ்விவகாரத்தில் மொத்தமாகவோ அல்லது சிறு பகுதி நிலம் தொடர்பாகவோ எவ்வித பதிவையும் சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மேற்கொள்ளக்கூடாது' என, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதை விலக்கிக்கொள்ள உத்தரவிடக்கோரி, சென்னை ரங்கசாமி, சித்ரா, வாசுதேவானந்த் ரங்கசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு, 'இது சிவில் பிரச்னை. இதை எப்படி பொதுநல வழக்காக கருத முடியும்' என, கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 'அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை அறப்பணிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். விற்பனை செய்ய முடியாது.
'சட்டவிரோதமாக ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணை நடக்கிறது' என்றார்.
ரங்கசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன், 'ரங்கசாமி உள்ளிட்டோர் சொத்தின் உரிமையாளர்கள். மனுதாரர் குறிப்பிடும் சொத்தினை முற்றிலும் தானமாக கோவிலுக்கு வழங்கவில்லை. சொத்திலிருந்து வரும் வருவாயை திருப்பணிக்கு பயன்படுத்தலாம்' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் செயல் அலுவலர், பதிவுத்துறை ஐ.ஜி., இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் மனுதாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ., 5க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை இடைக்கால தடை நீட்டிக்கப்படுகிறது' என்றனர்.