274 ஊராட்சிகளில் 619 நிலுவை பணிகள் முடிக்க துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலத்திற்குள் நிறைவு செய்ய உத்தரவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், 619 நிலுவை பணிகளை முடிக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் வரும் அக்டோபர் மாதத்தில் முடிவதால், அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு; காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றிய குழு; 274 ஊராட்சிகள் என, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன.
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களில், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி தலைவர்களாகவும், கவுன்சிலர்களாவும் என, மக்கள் பிரதிநிதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம், அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சி நடந்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல், வார்டுகள் மறு வரையறுவிற்கு பின், அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அதுவரையில், தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய குழு நிர்வாகம், மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகங்கள் இயங்கும்.
ஊராட்சிகளில் சாலை, கட்டடம் உள்ளிட்ட பல வித வளர்ச்சி பணிகளை பதிவு செய்த ஒப்பந்ததாரரின் பெயரில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் எடுத்து கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் ஒப்பந்தம் எடுத்தவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதமர் கிராமப்புற சாலைகள் போடும் திட்டம், முதல்வரின் கிராமப்புற சாலைகள் போடும் திட்டம், 15வது நிதி குழு மானியம் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - -2 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் 619 பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன.
குறிப்பாக, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கனவு இல்லம், மத்திய அரசின் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் வீடு கட்டுவோரின் எண்ணிகையும் நிறைவு செய்யப்படாமல் உள்ளன.
இந்த வளர்ச்சி பணிகளை மக்கள் பிரதிநிதிகளின் பதவி நிறைவு பெறுவதற்கு முன் முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் ஒப்பந்தம் எடுத்தவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், ‛பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கும் அதிகாரிகள், நிதியை விடுவிக்கவும் முன் வர வேண்டும். ஆயிரம் காரணங்களை காட்டி நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்படுத்துகின்றனர். பதவிக்காலம் நிறைவு பெற இருக்கிறது. அதன் பின் யாரிடம் செய்த வேலைக்கு பணம் கேட்க முடியும்' என்றார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல திட்டங்களின் நிலுவை பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தம் எடுத்தவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்களுக்கு கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.