"விகடனால் பேச்சாளரானேன்!"
ஒரு தனியார் நிறுவனம் அவர்களின் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஒரு சாஃப்ட்வேர் டெவலப் செய்யச் சொல்லியிருந்தது.

“விகடன் வந்துருச்சா..?”
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் இருக்கும் புத்தகக் கடையில் அதிகாலையிலேயே நான் இருப்பேன். பல நேரங்களில் இதழ் கடைக்கு வந்திருக்காது. காத்திருத்து வாங்கிச் செல்வேன். வெறும் க்ரைம் நாவல்கள் மட்டுமே எனக்கு அறிமுகமாகி, அவற்றையே படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருமுறை பாட்டி வீட்டுக்குப் போனபோது அங்கிருக்கும் என் மூன்றாவது சித்தப்பாவின் படிப்பறையில் இருந்த ஆனந்த விகடன் என் கவனத்தை ஈர்த்தது.
புரட்டிப் பார்த்தபோது, ‘துக்கடா’, ‘ரெட்டைவால் ரெங்குடு’ என விதவிதமான கட்டுரைகளும், பிரபஞ்சனின் கதையும் என்னை உள்ளே இழுத்துப்போட்டன. சுத்தமான பேச்சுத் தமிழாகவும் இல்லாமல், எழுத்துத் தமிழாகவும் இல்லாமல் ஓர் எளிய மனிதனின் மொழியில் இருந்த விகடனின் நடை என்னை வசியம் செய்தது. பள்ளிப் பேச்சுப்போட்டியில் சுத்தத் தமிழில் பேச முயன்று தோற்றுப்போன நான், விகடன் வாசிக்கத் தொடங்கிய பிறகு அதனுடைய எளிய நடையில் என் பேச்சையும் மாற்றி வெற்றி கொண்டேன்.
1985 முதல் விகடனைப் படித்து வரும் நான் அதன் வடிவமைப்பிலும், காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் வித்தையிலும் மயங்கி, என்னையும் விகடன்போலவே வடிவமைத்துக் கொண்டேன். அப்போதிருந்து எனக்கும் மேடையில் பேசும் கலை கைவந்துவிட்டது எனலாம். அதன் பிறகு 1987-ல் கல்லூரியில் சேர்ந்து, அங்கு நடைபெற்ற பட்டிமன்றம், கல்லூரி இதழ் என எல்லா இடங்களிலும் என் பங்கு இருந்தது. விகடனும், விகடனில் எழுதிய எழுத்தாளர்களின் இயல்பான தமிழும் ஒவ்வொரு வாரமும் கொஞ்சம்கூட என்னை ஏமாற்றாமல் எனக்கு இன்ஸ்பிரேஷன் தந்தன!
கல்லூரி மேடைகளில் கரவொலி பெற்ற நான், பின்னர் விகடனின் கேள்வி-பதில் பகுதிகளுக்கு எழுதுவது, கவிதை எழுதுவது என பிராக்டிஸ் பண்ண ஆரம்பித்தேன். அப்படி நான் எழுதிய சிறுகதைகள் என் நண்பர்களிடையே பிரபலம். மேடைப் பேச்சாளராக இருந்து, பின்னர் மோட்டிவேஷன் பேச்சாளராகி, அப்படியே பிசினஸ் பயிற்சியாளனாகவும் ஆனேன். நான் ஏறாத கல்லூரிகள் இல்லை என்ற அளவில் என் பயணம் அமைந்தது. இன்று பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கன்சல்டன்ட்டாகவும், விற்பனைப் பயிற்சியாளனாகவும் இருக்கிறேன்.
ஒரு தனியார் நிறுவனம் அவர்களின் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஒரு சாஃப்ட்வேர் டெவலப் செய்யச் சொல்லியிருந்தது. அதன் மேற்பார்வையில் நான் இருந்தபோது, அந்தப் பயிற்சி சாப்ஃட்வேர் மிகவும் எளிமையாகவும், கற்றுக்கொள்ள சுவாரசியமாகவும் இருக்க வேண்டும் என்று ஆனந்த விகடன் இதழை மேற்கோள்காட்டி ‘இதுபோல் டெவலப் செய்யுங்கள்’ என்று அந்த மென்பொறியாளர்களிடம் கூறினேன். மேலும், கஸ்டமர்களிடம் புராடக்ட் டெவலப்மென்ட் பற்றிப் பேசும்போது விகடன் எப்படிப் பல பரிமாணங்களில் சிறந்து விளங்குகிறது என்பதை எடுத்துக்காட்டாகச் சொல்வேன். இப்படி என் வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் விகடன் தான் முன்னின்று என்னை வழிநடத்துகிறான்.
கூலித் தொழிலாளர் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த நான் இன்று கல்லூரிப் படிப்பைத் தாண்டியது மட்டுமன்றி, பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே பேசுவதும் விகடன் தந்த ஊக்கம் தான். இதற்காகவே விகடனுக்கு என்றும் நன்றி உடையவனாக இருக்க வேண்டும்!
உங்க வாழ்க்கையிலயும் `விகடன் செஞ்ச சம்பவம்’னு ஒண்ணு கண்டிப்பா இருக்கும்தானே... அதை அப்படியே எங்களுக்குச் சொல்லுங்க. விகடன் எப்படியெல்லாம் உங்க வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கான்னு எழுதி அனுப்புங்க. மறக்காம எந்த இதழ், எந்தப் படைப்பு, அந்த எழுத்தாளர் யார் எப்படிப் புரட்டிப்போட்டது என்பதையும் குறிப்பிடுங்க.
லெட்டர் போடுங்க, மெயில் தட்டுங்க... இல்லைன்னா போனை எடுத்து ஒரு ரீல்ஸை சுடுங்க! மறக்காம #VikatanSambavam அப்படின்னு ஹேஷ்டேக் போடுங்க. சூப்பரான சம்பவங்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சம்பவங்களை அனுப்ப: விகடன் சம்பவம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. மின்னஞ்சல்: sambavam@vikatan.com
