ரயில்வே மேம்பால பணிகளால் கனரக வாகனங்கள் செல்ல தடை
சிங்கபெருமாள் கோவில், செப். 11-- செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி

செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - தாம்பரம் ரயில்வே தடத்தில், பரனுார் - - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் இடையே மகேந்திரா சிட்டி - செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் உள்ளது.
இதனை கடந்து செட்டிபுண்ணியம், வடகால் உள்ளிட்ட கிராம மக்கள் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பேருந்து மட்டுமே சுழற்சி முறையில் இயக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இதனால், சாலை குறுகலாக மாறி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால் மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து நமது நாளிதழில் கடந்த மாதம் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில், கனரக வாகனங்கள் செல்ல ,நெடுஞ்சாலை துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், திருத்தேரி ரயில்வே கேட் வழியாக கனரக வாகனங்கள் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.